Meine Blog-Liste

Samstag, 23. Februar 2019

Sathiyasekar Baskarjayaraman

உள்ளங்கையில் வாசம் செய்யும் மகாலக்ஷ்மி !
உள்ளங்கையில் விழித்தால் லக்ஷ்மி கடாக்ஷம்; சுக்ரயோகம்! அழுக்குத்துணி, கிழிந்த ஆடை உடுத்தினால் சுக்ரதோஷம்!
சுக்ர பகவானைப் பற்றிய விவரங்களைப் பார்த்து வருகிறோம். வாழ்வில் சுக்ர யோகத்தைத் தந்தருளும் சுக்ர பகவானை இன்னும் பார்ப்போம்.
திரைப்படம், நடிகர், நடிகைகள், கலைஞர்கள் என இவர்கள் சுக்ரனின் ஆதிக்கம் உள்ளவர்களே.
நடனம், நாட்டியம், கலையரங்கம்,திரையரங்கம், உயர் மது விடுதிகள், உயர் மதுபானங்கள், மன மகிழ் மன்றங்கள் ஆகியவையும் சுக்ரன் வாசம் செய்யும் இடங்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
மேற்கண்ட தொடர்பு உடைய தொழில் செய்பவர்கள் சுக்ரனின் அருட் பார்வையால்தான் அவற்றைத் தொடர முடிகிறது. அதில் கொழித்து வருவதும் சுக்ரனின் பேரருளால்தான்! ஆனால் கூடவே ஒரு கிரகம் இதற்கு தொடர்பு கிரகமாக இருக்கிறது. அது... அது ராகு பகவான்.
ஆம், ராகு தொடர்பு இருந்தால், மதி மயக்கும் ஆடம்பர விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சரி... நீச சுக்ரன் பெண்களின் ஜாதகத்தில் என்ன மாதிரியான பலன்கள் தரும்?
அவசர முடிவுகளை எடுக்க வைக்கும். பேராசைகளை உருவாக்கும். திருமணம் முதலான எந்த விஷயத்திலும் அவசர முடிவு எடுத்து காலம் முழுவதும் மன உளைச்சலோடு வாழ வைக்கும்.
எதிலும் திருப்தி இல்லை என்ற மன உளைச்சலைத் தரும். அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சமூகத்தில் அவப்பெயர்தான் கிடைக்கும். களங்கம் உண்டாக்கும். காதல் எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
தான் செய்வது தவறு என்பதைக் கூட உணரமாட்டார்கள் இவர்கள். எல்லாரிடமும் சகஜமாகதான் பழகுவார்கள். ஆனால் அதைத் தவறாகப் பார்ப்பார்கள் எல்லோரும்!
சரி, இவர்களுக்கு என்ன பரிகாரம்?
துர்கை வழிபாடு, அதிலும் "விஷ்ணு துர்கை" வழிபாடு மிக மிக முக்கியம். துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் அளப்பரிய நன்மைகளைத் தரும்.
"கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை" என்றார் அவ்வையார். ஆக வறுமை என்பது நம் வாழ்வில் வரக்கூடாது என்றால் நாம் என்ன மாதிரியான வழிபாடுகள், பூஜைகள், சம்பிரதாயங்கள், நியமங்களைக் கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?
நமது உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே காலையில் தூக்கத்திலிருந்து எழும்போது, உங்கள் உள்ளங்கையில் விழித்திடுங்கள்.
இரண்டு கைகளையும் பரபரவென தேய்த்து உள்ளங்கையால் உங்கள் இரு கண்கள் மீதும் ஒற்றி எடுங்கள். காரணம் கண்கள் இரண்டும் தாமரை மலருக்கு ஒப்பானது. தாமரையில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். தூக்கம் என்னும் நித்ராதேவி நம்மை விட்டு அகல மெலிதான இளஞ்சூட்டுடன் அவளை அப்புறப்படுத்தவே இதைச் செய்கிறோம். செய்யவேண்டும்.
எனவே உள்ளங்கையில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மியின் முகத்தில் விழிப்பதும் தாமரையில் வாசம் செய்யும் லக்ஷ்மிதேவியை, தாமரைக்கு நிகரான கண்களை ஒற்றிக்கொண்டு எழுந்திருப்பதும் நல்ல அதிர்வுகளை உண்டாக்கும். தரித்திர நிலையில் இருந்து நம்மையும் நம் வீட்டையும் மாற்றியருளும்!
அடுத்து... எக்காரணம் கொண்டும் துவைக்காத ஆடை, முதல் நாள் அணிந்த ஆடைகளை உடுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.
எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். அந்த சிரசின் பிரதானம் முகம்.
அகத்தின் அழகைக் காட்டுவது முகம். எனவே எப்போதும் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
"நீறில்லா நெற்றி பாழ் " என்பார்கள். எனவே, வெறும் நெற்றியோடு இருக்காதீர்கள். திருநீறை நடு நெற்றியிலும், குங்குமத்தை புருவ மத்தியிலும் இட வேண்டும். இதெல்லாம் முகத்தில் லக்ஷ்மி கடாட்சத்தை தரும்.
வீட்டை அழகுபட வைத்துக் கொள்வது லக்ஷ்மி வாசம் செய்யும் வழிகளில் ஒன்று. காலை மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றி தூப தீபம் காட்டுங்கள். தெரிந்த பக்திப் பாடல்களை பாராயணம் செய்யுங்கள். அஷ்டோத்திரம், நாமாவளி முதலானவற்றை மெல்லிய இசையில் ஒலிக்கவிடுங்கள். அதைக் கேட்டபடி இருப்பதும், வீட்டில் அந்த இசையும் வரிகளும் வியாபித்திருப்பதும் மிகுந்த அதிர்வுகளை உண்டாக்கும்!
வலம்புரிச் சங்கு இருக்கும் வீட்டில் வறுமை இருக்காது என்கிறது சாஸ்திரம். வலம்புரிச் சங்கில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். முறையாக வலம்புரிச் சங்கை பூஜித்து வாருங்கள். செல்வ வளம் பெருகும்.
வெற்றிலை, துளசி, வில்வ இலை, சாமந்திப்பூ, வெண்தாமரை, நெல்லிக்கனி இவை எல்லாவற்றிலும் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். இதில் ஏதாவது ஒன்றை பூஜை வேளையில் வைத்து வழிபடுங்கள்.
இயலுமெனில், ஏகாதசி விரதம் இருப்பது மிகுந்த பலன்களைத் தரும். ஏகாதசியில் விரதம் மேற்கொண்டு, துவாதசி அன்று ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு விரதத்தை முடியுங்கள். ஸ்ரீமகாலக்ஷ்மி உங்கள் வீட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பாள் என்பது உறுதி!
முகம் பார்க்கும் கண்ணாடியும் லக்ஷ்மியின் அம்சம்தான். அதனால் தான் உடைந்த அல்லது விரிசல் விழுந்த அல்லது ரசம் போன கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது என்றும் அதை வீட்டிலேயே வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் சொல்லிவைத்தனர்.
’’எல்லாம் சரிதான். ஆனா, சுக்ரனைப் பற்றி சொல்றேன்னு சொல்லிட்டு, லக்ஷ்மியைப் பத்தி விவரிச்சிக்கிட்டே இருக்கீங்களே...’ என்று கேட்கிறீர்கள்தானே!
காரணமும் தொடர்பும் இருக்கிறது.
சுக்ரனின் அதிதேவதை ஸ்ரீ மகாலட்சுமி.
ஆக சுக்ரனின் அருளைப் பெறவேண்டுமென்றால், மகாலக்ஷ்மியை வழிபடவேண்டும்.
விஷ்ணு சகஸ்ரநாமம், லக்ஷ்மி சகஸ்ரநாமம், ஸ்ரீசூக்தம், லலிதா சகஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டோத்ரம், துர்கா அஷ்டோத்ரம் முதலானவற்றை பாராயணம் செய்து வாருங்கள். லக்ஷ்மியின் அருள் கடாட்சம் நம் மீது அருவியெனப் பாய்ந்தோடும்.
வீட்டில் பூஜையறையில் வெள்ளியிலான ஏதாவதொரு பொருளை பயன்படுத்துங்கள், குறைந்த பட்சம் குங்குமச் சிமிழில் குங்குமம் நிரப்பி அந்தக் குங்குமத்தை இட்டு வாருங்கள்.
ஏன் தெரியுமா? வெள்ளி - சுக்ரனின் உலோகம்.
ஆண் பெண் யாராக இருந்தாலும் இடுப்புக்கு மேல் தங்க ஆபரணங்களையும், இடுப்புக்கு கீழ் வெள்ளி ஆபரணங்களையும் அணியவேண்டும். அப்படி அணிவதே உத்தமம். அதுவே சிறப்பு.
தங்கம் குருபகவான் - வெள்ளி சுக்ர பகவான். குரு பேரின்பம் - சுக்ரன் சிற்றின்பம். அதனால்தான் இடுப்புக்குக் கீழே வெள்ளியிலான அரைஞாண் கயிறு, கொலுசு, மெட்டி என அணிகிறோம்', வெள்ளியானது சிற்றின்ப உறுப்புக்களைத் தூண்டி விடும்.
சுக்ரனின் முழு அம்சமும் குணமும் பொருந்தியவர் கொங்கணர் சித்தர். மலையை தங்கமாக மாற்ற முயற்சித்தவர். சிவபெருமானால் தடுக்கப்பட்ட்டார். திருமலை திருப்பதிக்கு அவரை அனுப்பி அருளினார் சிவனார். திருமலையில் கொங்கணர் ஜீவ சமாதி அடைந்தார். ஒருவகையில் திருமலையின் பெரும் செல்வத்துக்கு காரணம் கொங்கண சித்தர் என்றும் சொல்லுவார்கள்.
எனவே திருமலை திருப்பதிக்குச் சென்று வந்தால் பொருளாதார தேக்க நிலை மாறி செல்வந்தர் ஆகும் வாய்ப்பு உண்டாகும்.
கண் பார்வை கோளாறுகளுக்கும் சுக்ரனே காரணகர்த்தா.
ஒளி கிரகங்கள் - சூரியன், சந்திரன், விடிவெள்ளி என்னும் சுக்ரன்.
இன்னொரு விஷயம்... சுக்ரனுக்கு ஒரு கண் கிடையாது. ஆகவேதான் சுக்ரன் ஆட்சி ,உச்சம், நீசம் என்ற எந்த நிலையில் இருந்தாலும் பார்வைக் கோளாறைத் தருவார்.
பார்வை பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் உடல் சூடு. சுக்ரன் குளிர்ச்சி அம்சம். எனவே உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலே பார்வை கோளாறிலிருந்து தப்பிக்கலாம்.
சுக்ரன் எல்லா செல்வங்களையும் உங்களுக்கு அருளுவார்.
சுக்ரனின் அருட்பார்வை வேண்டுமானால், மகாலக்ஷ்மியை வணங்குங்கள்.
மகாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷம் வேண்டும் என்றால் சுக்ர பகவானை வழிபடுங்கள்.
கவலையே வேண்டாம்... உங்களுக்கு சுக்ர யோகம் கிடைப்பது உறுதி!
அன்பு குழந்தைகள் அனைவருக்கும் அச்சர்யா பாபாஜியின் ஆசீர்வாதங்கள்🙋‍♂🙋‍♂🙋‍♂

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்