Meine Blog-Liste

Mittwoch, 20. Februar 2019

மாத்தளை அருள்மிகு முத்துமாரி அம்மன்.-ஆடீரூஞ்சல்.

மாத்தளை அருள்மிகு முத்துமாரி அம்மன்~*" 
மிடல் பொருவுமேரு கிரிதனக் கொப்பாக
விளங்கிய பொற் சிகரமதின் மேலன்பாகக்
கடன் மதித்துமங்குலங்கள் படிந்துமாரக்
கவின் செய்த கோவையென வழகுகூரப்
படமிகுத்த உம்பர் காளரங்கள் போலப்
பகரரிய பலசுடர்கள் பரிந்து காலத்
திடமிகுத்த அவையாகு மரங்கத் தேறிச்
சிவகாமி மாரி அம்மை ஆடீரூஞ்சல்.
,,,,,
கண்ணகன் ஞாலந்தப் பாய்வயிரங் காலாய்க்
கருதுமாணிக்க உத்ரக்கவின் செய்பாலய்ப்
பண்ணமைந்த நவவச்ரப் பறளையாகிப்
பதுமரா கத்திடை யேபருமல் தேக்கி
வண்ணமைந்த மரகத நற்றகடு தாவி
வளமிகுந்த மண்டபத்தின் மகிழ்வாய் தேவி
விண்ணமையும் பன்னகமப் பதியை ஆண்டு
மேவு கவுமாரி அம்மை ஆடீரூஞ்சல்.
,,,,,,,,,
பார் வாழ்க மறை வாழ்க சைவம் வாழ்க
பகரரிய பலதொண்டர் நாளும் வாழ்க
ஏர்வாழ்க மங்கையர் கற்பினிது வாழ்க
வின்பமுடனரசர் செங்கோல் நாளும் வாழ்க
தாரனைய பன்னகமத் துள்ளோர் வாழ்க
தருகவி சொன்னோர் கிளைகள்
தளிர்த்தேவாழ்க
நேரனைய அம்மை சிவாலயமும் வாழ்க
நிறை மாரியருள் வாழ்க ஆடீரூஞ்சல்.
,,,,,,,
பேர் கொண்ட அறிஞரும் கலைஞரும் சேரும்
சீரிய பண்ணாகமம் பதியது ஓங்கும்
கார் கண்ட மயிலென மகிழ்வுடன் அடியார்
உன் பாதம் பணிந்திட ஊக்கமாய் அருள்வாய்
ஏர்முதல் தொழில்களும் எம் மண்ணில் ஓங்கிட
சூலங்கொள் கரத்துடனே கருணையருள்வாய்
தேர் கொண்ட நாயகி பாரிலே அருள
மாரியம்மா பள்ளி எழுந்தருளாயே
^^^^^^^^^^^^^^^^^^^^
மாசியாம் திங்கள் மகத்தினில் நீயோ
மாசில்லா இரதம் தனில் பவனியும் வருவாய்
தேசுடன் உன்முகம் அருளினை பரப்பும்
தேவியே உன்வரம் தேவையை நிறைக்க
காசியும் கங்கையும் போன்ற நதியாம்
மாவலி கங்கையோ உன்னைத் தாலாட்ட
நேசமாய் அடியார்க்கள் வாழ்வது சிறக்க
நாயகியே பள்ளி எழுந்தருளாயே.
^^^^^^^^^^^^^^^^^^^^^
பொன்னிலங்கு ஈழமதன் மத்திய மலைநாட்டில்
தொன்று தொட்டுப் புகழ்படைத்த மாத்தளையின் பண்ணாகமம்
என்றுரைக்கும் ஊரினிலே எழுந்தருளி வந்த அம்பாள்
என்றும் எமக்கருள் புரிவாள் ஏற்றிடுவோம் அவள் தாளை
^^^^^^^^^^^^^^^^^^^^
அஞ்சலென அபயகரம் காட்டி நிற்கும் அம்மையவள்
பஞ்சரதப் பவனியிலே முதன் முதலில் வந்தவளாம்
செஞ்சொற் கவிஞர்களால் பாடல் பெற்ற தலமதுவாம்
கெஞ்சி நிற்கும் அடியவரின் பஞ்சமதைப் போக்கிடுவாள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீரால் வளஞ் பெறும் மண்ணாம்
மாத்தளை என்னும் ஒரு பதியில்
பரோர் போற்றும் பழம் பெருங் கோயில்
முத்துமாரி தலத்தில்
தேரோ ஐந்தும் பவனி இன்று
வருவதை நாம் வாழ்த்தி
ஊரார் இணைந்து மாத்தளையில்
பல்லாண்டு கூறுதுமே
''தாயேயாகி வளர்தாய் போற்றி போற்றி எமைக்காக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மையே போற்றி போற்றி''

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்