Meine Blog-Liste

Freitag, 22. März 2019

திருப்புல்லாணியில் பாண்டியர்கால கல்வெட்டுகள்... அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு!

திருப்புல்லாணியில் பாண்டியர்கால கல்வெட்டுகள்... அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு!

நன்றி -விகடன் 

இந்தக் கோயிலில், சதயத்திருநாள் கொண்டாடுவதற்கு வேண்டிய திருப்படி மாற்று உள்ளிட்ட பொருள்களுக்காக, நிலத்தை இவர் தானமாக வழங்கிய செய்தி ஒரு கல்வெட்டில் உள்ளது. தானமாக வழங்கப்பட்ட ஊர் பெயர் அதில் இல்லை.4

ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில், புதைந்த நிலையில் இருந்த கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சில கல்வெட்டுகளை திருப்புல்லாணி அரசுப் பள்ளி  மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருப்புல்லாணி, 108 திவ்ய தேசங்களில் 96-வது திவ்ய தேசம். ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலம் இது. இந்த தலத்தின் மூலவர், ஆதி ஜகந்நாத பெருமாள். உற்சவர், கல்யாண ஜகந்நாதர். தாயாரின் திருப்பெயர் கல்யாணவல்லி. கருவறை விமானம் கல்யாண விமானம். இத்தனை மங்களகரமாகத் திகழும் இந்தத் தலத்துக்கு வந்த ராமபிரான், இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டவேண்டி கடலரசனின் அனுமதி கேட்டு மூன்று நாள்கள் காத்திருந்தார். அப்போது, அவர் தர்ப்பைப் புல்லின்மீது சயனித்திருந்தார். எனவே, இந்தக் கோயிலில் ஆதிசேஷன் மீது தர்ப்பைப் புல் விரித்து, அதில் சயனித்திருக்கும் கோலத்தில் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தலத்தில்தான் பிள்ளை வரம் பெற தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார் என்கிறது தலவரலாறு. இந்தக் கோயிலில், ராமபிரான் பட்டாபிஷேக ராமராக கொடிமரத்துடன் கூடிய தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார்.
திருப்புல்லாணி
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் உள்ள பட்டாபிஷேக ராமர் சந்நிதியின் தெற்கு வெளிப்புறச் சுவர், மூன்றாம் பிராகாரம் ஆகிய இடங்களில், சுவரின் அடிப்பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் கல்வெட்டுகள் இருந்ததைத் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்தனர். இவை கி.பி 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் ஆகும்.
இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளருமான ராஜகுரு கூறுகையில், ''திருப்புல்லாணி கோயிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தும் துண்டுக் கல்வெட்டுகள் ஆகும். இதில் ஒன்று 'கோனேரி மேல் கொண்டான்' எனும் அரசாணைக் கல்வெட்டு. மூன்று கல்வெட்டுகளில் உலக முழுதுமுடையார் என்பவர் பெயர் உள்ளது. அவர் வீரபாண்டியன் சந்தி,  சதயத் திருநாள், தேவதானம் ஆகியவற்றிற்காக நிலங்களை இந்தக் கோயிலுக்குத் தானமாக வழங்கியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.
திருப்புல்லாணி கோயிலில், வீரபாண்டியன் சந்தி எனும் ஒரு பூசைக் கட்டளையை  உருவாக்கி, அதற்கு உலகு சிந்தாமணி வளநாட்டு அமுதகுணமங்கலம் என்ற ஊரை அவர் தானமாகக் கொடுத்துள்ளார். உலகு சிந்தாமணி வளநாடு என்பது சாயல்குடி பகுதி ஆகும். சாயல்குடி அருகில் உள்ள திருமாலுகந்தான்கோட்டை சிவன்கோயில் கல்வெட்டுகளில், அவ்வூர் பெயர் அமுதகுணமங்கலம் எனவும், அளற்றுநாட்டில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இக்கல்வெட்டில் அவ்வூர் உலகு சிந்தாமணி வளநாட்டைச் சேர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
திருப்புல்லாணி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்
இந்தக் கோயிலில், சதயத்திருநாள் கொண்டாடுவதற்கு வேண்டிய திருப்படி மாற்று உள்ளிட்ட பொருள்களுக்காக, நிலத்தை இவர் தானமாக வழங்கிய செய்தி ஒரு கல்வெட்டில் உள்ளது. தானமாக வழங்கப்பட்ட ஊர் பெயர் அதில் இல்லை. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள கல்வெட்டில், இந்தக் கோயில் பூஜைக்கு வேண்டிய நிபந்தங்களுக்கு, வரி நீக்கப்பட்ட நிலத்தை இவர் தேவதானமாக வழங்கியுள்ளதை அறியமுடிகிறது.
இந்தக் கல்வெட்டுகளில் சொல்லப்படும் உலகமுழுதுமுடையார் என்பவர், கி.பி.1253 முதல் கி.பி.1283 வரை ஆண்ட முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் பட்டத்தரசி ஆவார். மன்னன்  நலமாக  வாழ, அவன் பெயரில் ஒரு சந்தியும், அவன் சதய நட்சத்திரத்தில் பிறந்தவன் என்பதால், அதை சதயத் திருநாளாக கொண்டாடவும் தேவையான தானங்களை இந்தக் கோயிலுக்கு அவர் வழங்கியுள்ளார். எனவே, இதில் உள்ள சில கல்வெட்டுகள் முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது.
அந்தராயம், விநியோகம், தறி இறை, தட்டளிப்பாட்டம், செக்கிறை, அச்சு ஆகிய வரிகள் இந்தக் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.  திருமலை ரகுநாத சேதுபதி காலத்தில் இந்தக் கோயிலின் பல பகுதிகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளதாக தளசிங்கமாலை என்ற நூல் கூறுகிறது. அந்தத் தருணத்தில், கோயில் மறுகட்டுமானத்தின்போது பல கல்வெட்டுகள் இடம் மாறியிருக்கலாம்'' என கல்வெட்டுகள் குறித்த செய்தியினை விளக்கினார். 
கல்வெட்டு படியெடுக்கும் நிகழ்ச்சியில், வேளானூர் அரசு உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் கு.முனியசாமி, ராமநாதபுரம் சாந்தக்குமார், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த விசாலி, பிரவீணா, மனோஜ், தர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்