முருகன்
முருகனுக்குரிய விரதங்கள் மூன்று
முருகனுக்கு உகந்த நாட்களிலும் செவ்வாய்கிழமைகளிலும் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும்.
📷வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம்நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம்திதி விரதம் : சஷ்டி விரதம்
செவ்வாய்கிழமை விரதம்:
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறி யுள்ளார்கள். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனை யும் முதல்நிலை கடவுளாகக் கொண்டி ருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைபிடித்தால் வாழ்வில் அமைதி உண்டாகும்!
கார்த்திகை விரதம்:
கார்த்திகைப் பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு ஒரு வாரம் அளித்தார். ‘கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்’ என்று அருள் புரிந்தார்.
கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேளை வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகலில் உறங்குதல் கூடாது.
கார்த்திகை மாதம் விரதம் இருந்து தீப தரிசனம் செய்தல் மிகுந்த புண்ணியமாகும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தை முக்கியமாக வைத்து அண்ணாமலை தீபம் வருவதால் இதற்கு ‘கார்த்திகை தீபம்’ என்ற பெயரும் உண்டாயிற்று. இந்நாளில் இல்லம், கோவில், மடம், சத்திரம், மலை உச்சி, வாசற்படி, மண்டபம், மூலஸ்தானம், வியாபார ஸ்தலங்கள் ஆகியவற்றிலும் மங்களம் உண்டாகத் தீபங்களை ஏற்றலாம்.
கார்த்திகை மாத விரதத்தின் மகிமையை சிவபெருமான் கார்த் திகைப் பெண்களுக்கு அருளியுள்ளார். கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபடுவோர் சிவபெருமான், முருகப்பெருமான் அருளைப் பெறுவர்.
கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் ரோகிணியில் காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்ய வேண்டும். அடியார்களோடு கூடி உண்ண அன்னதானம் செய்யலாம். பின்னர் மாதந்தோறும் கார்த்திகை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
கார்த்திகை விரதத்தால் முருகன் அருளால் சகல செல்வயோகமிக்க பெருவாழ்வை பெறுவார்கள். விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.
கந்தர் சஷ்டி விரதம் :
கந்தர்சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலும் ஆறு நாட்களுக்கு ஸ்ரீ முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும்.
ஆறுபடை வீடுகளிலும் முருகன் தலங்களிலும் இத்திருவிழா நடைபெறும். இந்த ஆறு நாட்களும் விரதம் இருப்பவர்கள் காலையில் நீராடி, உபவாசம் இருத்தல் வேண்டும். கோவிலிலோ அல்லது இல்லத்திலோ முருகனை வழிபாடு செய்து பாராயணம் செய்யலாம். இக்காலங்களில் திருப்புகழ், கந்தர்சஷ்டி கவசம், சண்முக கவசம், கந்தர் அனுபூமி ஆகியவற்றைப் பாராயணம் செய்தல் சிறப்பாகும்.
ஆறுதினமும் உபவாசம் இருந்து ஆறாம் நாள் இரவு பால், பழம் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. உடல்நிலை இடம் கொடுக்காதவர்கள் தினமும் ஒரு வேளை மதியமோ அல்லது இரவோ பலகாரமோ அல்லது பால், பழமோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.
கந்தர் சஷ்டி விரதத்திற்குக் கணக்கற்ற பலன்கள் உண்டு. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழியாகும். சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது இதன் பொருளாகும். கந்தர்சஷ்டி விரதத்தை முசுகுந்தச் சக்கரவர்த்தி அனுஷ்டித்து எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவர் ஆனார்.
தைப்பூசம் விரதம் :
தை மாதம் பூச நட்சத்திரம் தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுபவர்கள் மிகுந்த பலன்களை பெறுவார்கள். சமீபகாலமாக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரு மாத காலம் விரதமிருந்து காவடி, பால்குடம் ஆகியவற்றை எடுத்துச் சென்று முருகனை வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
தைப்பூச விரதம் இருக்கும் வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் சுமார் நானூறு ஆண்டு காலமாக வழக்கத் தில் இருந்து வருகிறது. பூசத்திற்கு சில ஊர்களில் வீடுகளில் பொங்கல் வைப்பது உண்டு. இதை பூசப் பொங்கல் என்று சொல்வார்கள்.
தைப்பூசத்திற்கு விரதம் இருப்பவர்கள், மிகவும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். மரணம் அடைந்த வர்கள் வீடுகளுக்கு கூட செல்ல கூடாது. எந்நேரமும் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும். கந்தனை நினைத்து காவடி எடுத்து பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி வழிபடும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நமது வாட்டத்தையெல்லாம் அவன் போக்கி விடுவான். வாழ வழியும் வகுப்பான்.
நன்றி - மாலைமலர்
Keine Kommentare:
Kommentar veröffentlichen