Meine Blog-Liste

Samstag, 8. September 2018

நல்லூர் கந்தன் தீர்த்தத்திருவிழா ...09.09.2018

நல்லூர் கந்தன் தீர்த்தத்திருவிழா ...
நல்லூரான் சக்தி நாடெங்கும் பரவட்டும்...

























திரு அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ் 242
திருப்புகழ் படித்தால் இடர்கள் பறந்தோடும் என்று அருணகிரிநாதர் இப் பாடலில் உறுதிபடக் கூறுகிறார்:
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் ...... தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.
உயிர் போகும் தொலையா வழிக்கு உற்ற துணையாய் இருக்கும் அவல் போன்ற திருப்புகழை ஆர்வத்தோடு படிப்பவர்களுடைய சங்கடங்களை அறுத்தெறியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்ற, இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றும், அகத்துறைப் பாக்கள், இலக்கணம், இலக்கியம் என்றும், நால்வகைக் கவிகளையும்* உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள், நினைப்பவர்கள் ஆகிய உன் அடியார்களை மிகவும் இவ்வுலகில் புகழாமல், தங்கள் மார்பாலும், முகத்தாலும், மனத்தை உருக்கச் செய்யும் சாமர்த்தியசாலிகளான பொதுமகளிரின் மோக மயக்கில் நான் விழலாமோ? (கூடாது என்றபடி), கரும்பு வில்லினை வளைத்து அதில் அழகிய மலர்ப் பாணங்களைத் தொடுத்து, மிகச் செருக்குடன் ஒளிந்திருந்து செலுத்திய மன்மதனை, தன் மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே அந்த மன்மதன் எரிந்து சாம்பலாகும்படி தன் நெற்றிக் கண்ணால் எரித்தவரும், கயிலை மலையிலே வீற்றிருப்பவரும், பர்வத குமாரி உமாதேவிக்கு தன் இடது புறத்தைத் தந்தவருமான பரமசிவன் பெற்ற மகனே, மேகங்கள் தங்கும் சோலைகளும், வயல்களும் சூழ்ந்த ஊராகிய இனிமை வாய்ந்த திருத்தணி மலையில் விருப்பம் கொள்ளும் பெருமாளே.
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
வேலும் மயிலும் துணை!

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்