Meine Blog-Liste

Montag, 10. September 2018

குமரகுருபர சுவாமிகள்.

தாமிரபரணிக் கரையில் பிறந்து கங்கைக்கரையில் ஸித்தி பெற்றவர்..! குமரகுருபரர்

நவ திருப்பதி, நவ கயிலாயங்கள் அமையப்பெற்ற புண்ணிய நதியான தாமிரபரணியின் வடகரையில் தோன்றியவர் குமரகுருபர சுவாமிகள். ஸ்ரீ வைகுண்டம் எனும் கிராமத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் - சிவகாம சுந்தரி தம்பதிக்குத் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் மகனாகப் பிறந்தவர். குமரகுருபரர் வாய் பேச முடியாதவராக இருந்தார். பிறந்ததிலிருந்து ஐந்தாண்டுகள் வரை அவர் பேசாத காரணத்தால் வருத்தமடைந்த பெற்றோர் குழந்தை வரம் கொடுத்த திருச்செந்தூர் முருகனிடம் சென்று முறையிட்டார்கள்.
தங்கள் குழந்தைக்குப் பேச்சு வரவேண்டும் என்று 45 நாள்கள் கடுமையாக விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டினார்கள். விரதம் முடிந்த பிறகும் குமரகுருபரருக்குப் பேச்சு வரவில்லை. மிகுந்த மனவருத்தம் கொண்ட பெற்றோர், குமரகுருபரரை செந்திலாண்டவரிடம் ஒப்படைத்துவிட்டு, கடலில் விழுவதற்குச் சென்றார்கள். சிறிது தொலைவுதான் சென்றிருப்பார்கள். குமரகுருபரர் பேசத் தொடங்கிவிட்டார். பேசத் தொடங்கினார் என்பதைவிட, பாடத் தொடங்கினார் என்பதே சரி. முருகனின் அருளால் பேசும் வரம் பெற்ற குமரகுருபரர், `கந்தர் கலிவெண்பா'வைப் பாடி கந்தக் கடவுளை வழிபட்டார்.
வாய் பேசுவானா என்று ஏங்கிய பெற்றோர்கள், குமரகுருபரர் பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து கண்ணீருடன் முருகனைத் தொழுதார்கள்.
இறைவனின் திருவருளால் தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஞான சாத்திரங்கள் ஆகியவற்றை விரைவில் கற்றுத் தேர்ந்தார் குமரகுருபரர். இவற்றோடு பக்தி ஞானமும் இவரிடம் பெருகத் தொடங்கியது. ஸ்ரீ வைகுண்டத்தில் தங்கியிருந்த காலத்தில், அந்தத் தலத்திலிருந்த கயிலாசநாதர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். மேலும், கயிலாசநாதரைப் போற்றி `கயிலைக் கலம்பகம்' எனும் பிரபந்த நூலை இயற்றினார்.
மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர், குமரகுருபரரின் கடவுள் பக்தியையும், தமிழ்ப் புலமையைப் பற்றியும் கேள்விப்பட்டு, அவரை அரண்மனைக்கு அழைத்துச் சிறப்பித்தார். அரசரின் விருப்பத்துக்கிணங்க, குமரகுருபரர், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை அரங்கேற்றிக்கொண்டிருந்தபோது புலவர்கள், அமைச்சர்கள் என அனைவரும் பக்தியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது மீனாட்சியம்மன் கோயிலின் தலைமை அர்ச்சகரின் மகள் உரிமையோடு வந்து திருமலை நாயக்கரின் மடியில் அமர்ந்தாள். குமரகுருபரர் முத்தப் பருவத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தபோது தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையைப் பரிசாக அவரது கழுத்தில் சூட்டிய குழந்தை, கோயில் கருவறையில் மீனாட்சியோடு கலந்து மறைந்தாள். குமரகுருபரரின் அருளால் மீனாட்சியையே நேரில் பார்க்கும் புண்ணியம் கிடைக்கப்பெற்ற மக்கள் அனைவரும் அவருக்கு நன்றி கூறினார்கள். இந்த அதிசயம் நடந்த பிறகு சில காலம் மதுரையில் தங்கியிருந்த குமரகுருபரர் மதுரை சொக்கநாதரைப் போற்றி, `மதுரைக் கலம்பக'த்தைப் பாடினார்.
அதன் பிறகு, சோழநாட்டு சிவத் தலங்களைத் தேடித் தேடி தரிசித்த குமரகுருபரர், திருவாரூர் தியாகராஜரைத் தரிசித்தபோது அவரைப் பற்றி `திருவாரூர் நான்மணிமாலை' எனும் நூலைப் பாடினார். திருவாரூர் தியாகராஜரை தரிசித்த பிறகு அவருக்கு `சிவ ஞான உபதேசம்' பெற வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்து உபதேசம் பெற்றார். மாசிலாமணி தேசிகரின் அறிவுரைப்படி சிதம்பரம் சென்றார் குமரகுருபரர். இடையில் அவர் ஸ்ரீ வைத்தீஸ்வரன்கோவில் தலத்தில் தங்கியிருந்தார். அந்தத் திருக் கோயிலில் அருள்புரியும் முருகப் பெருமானின் பெயர் முத்துக்குமார சுவாமி. அவர் மீது கொண்ட பக்தியால், `முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்' பாடினார்.
சிதம்பரம் சென்று நடராஜரை தரிசனம் செய்த வேளையில், நடராஜரின் அருளினால் தன்னிலை மறந்த பரவச நிலையில், `சிதம்பர மும்மணிக்கோவை'யை இயற்றினார். மேலும், `சிதம்பரச் செய்யுட் கோவை' என்ற நூலையும் இயற்றினார்.
நடராஜரின் தரிசனம் கிடைத்த பிறகு துறவறம் மேற்கொண்டு இறைவனின் பாதங்களைச் சரணடைய வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது. தனது குரு மாசிலாமணி தேசிகரிடம் தீட்சை பெற்றார். அப்போது பாடப்பட்டதுதான், `பண்டார மும்மணிக் கோவை.' அதிலிருந்து `குமரகுருபர சுவாமிகள்' என அழைக்கப்பட்டார். பிறகு காசி நோக்கிப் பயணம் செய்தார். காசி சென்ற குமரகுருபர சுவாமிகள், சுல்தான் பாதுஷாவைச் சந்தித்தார். சுல்தானுக்குத் தெரிந்த மொழி ஹிந்துஸ்தானி மட்டுமே. சுல்தானுடன் பேசும் வல்லமையைப் பெற சரஸ்வதி தேவியை நோக்கி, `சகலகலாவல்லி மாலை' எனும் பாமாலையைப் பாடினார். அதைக் கேட்டு மகிழ்ந்த சரஸ்வதி தேவி குமரகுருபரருக்குச் சுல்தான் பேசிய ஹிந்துஸ்தானி மொழியைப் பேசும் வல்லமையை அளித்தாள்.
அமர்வதற்கு இருக்கைகூட கொடுக்காமல் அவமதித்திருந்தான் சுல்தான். பராசக்தியிடம் வேண்டிய குமரகுருபரர் அவளது சிம்மத்தை வாகனமாகப் பெற்று சிம்மத்தின் மீதேறி அவனிடத்துக்குச் சென்றார். சிங்கத்தின் மீதேறி வந்த குமரகுருபரரை வணங்கிய சுல்தான் பாதுஷா அவருடன் நட்பு கொண்டு பழகினான். பிறகு மடம் அமைக்க இடம் கேட்டார் குமரகுருபர சுவாமிகள். சுல்தான், `காசியில் கருடன் சுற்றுவதில்லை. கருடன் சுற்றினால் அவன் சுற்றும் இடத்தில் உமக்கு மடம் அமைக்க இடம் கொடுக்கிறேன்' எனத் தெரிவித்தான்.
குமரகுருபரர் இறைவனை நோக்கிப் பாடினார். அவர் பாடத் தொடங்கியதும் கருடன் காசியில் வட்டமடிக்கத் தொடங்கியது. குமரகுருபரர் கேட்ட இடத்தை அவருக்குக் கொடுத்து சிறப்புச் செய்தான். அந்த இடத்தில் அமைக்கப்பட்டதுதான் காசி குமாரசுவாமி மடம். அங்கு முகம்மதியரால் மறைக்கப்பெற்ற கேதாரலிங்கத்துக்குக் கோயில் கட்டி பூஜை செய்தார். அந்தக் காலத்தில், `காசித் துண்டி விநாயகர் பதிக'மும், `காசிக் கலம்பக'மும் இவரால் இயற்றப்பெற்ற நூல்கள்.
அதன் பிறகு தமிழகம் திரும்பிய குமரகுருபரர், தனது குரு மாசிலாமணி தேசிகரைத் தரிசித்து வணங்கிவிட்டு மீண்டும் காசிக்கே சென்றுவிட்டார். காசியில் தங்கி இறைவனுக்குச் சேவை செய்து வந்தவர், வைகாசி தேய்பிறை திரிதியைத் திதியில் (1.6.18) இறைவனடி சேர்ந்தார். இந்த நாளில்தான் அவருக்குக் குருபூஜையும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, கங்கைக் கரையில் இறைவனடி சேர்ந்த மகான் குமரகுருபரரைப் போற்றி வணங்கி அவரது பாதம் பணிந்து அருள்பெறுவோம்!

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்