Meine Blog-Liste

Freitag, 28. Dezember 2018

திருப்புகழ் 2 பக்கரை விசித்ரமணி (விநாயகர்)
* திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர்
அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு
தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு
தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார்.
அந்த அபூர்வமான பாடல்தான் இது.

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துரகமும் ... அங்கவடி, பேரழகான மணி,
பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும்
பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும்,
நீபப் பக்குவ மலர்த் தொடையும் ... கடம்ப மரத்தின் நன்கு பூத்த
மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும்,
அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி
வேலும் ... அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன்
மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில்
உள்ள கூர்மையான வேலையும்,
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ... திக்குகள் எட்டும்
மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும்,
ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ...
காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு
தோள்களையும்,
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு
என எனக்கு அருள்கை மறவேனே ... வயலூரையும் பாட்டிலே
வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று
எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்.
இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் ... கரும்பு,
அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய்,
எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் ... எள், பொரி,
அவல், துவரை, இள நீர், தேன்,
பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் ... பயறு, அப்ப
வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம்,
இடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம்
எனக் கொள் ... பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள்,
சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக்
கொள்ளும்
ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப ... ஒப்பற்ற,
வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே,
கருணை மலையே,
குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக ... வளைந்த
சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான
அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே,
மருப்பு உடைய பெருமாளே. ... ஒற்றைக் கொம்பு** உடைய
பெருமாளே.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்