Meine Blog-Liste

Sonntag, 2. Dezember 2018

திருப்புகழ் பரவ வித்தாக அமைந்த பாடல்!

திருப்புகழ் பரவ வித்தாக அமைந்த பாடல்!
நாகப்பட்டினத்தை ஒட்டியுள்ள சிவத்தலம், திருச்செங்காட்டங்குடி. திருப்புகலூர், திருமருகல், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி ஆகிய நான்கு தலங்களும் ஒன்றுக்கொன்று அருகருகே அமைந்துள்ளன. நான்கும் தேவாரப் பாடல்கள் பெற்றவை.
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய லிடுமாதர்
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ னுழலாமற்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு
முருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர மணிமார்பா
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர்
பெருமாளே.
- என்னும் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்தான், இன்று தமிழகத்தில் திருப்புகழ் பரவ, வித்தாக அமைந்தது என்று சொன்னால், வியப்பு மேலிடத்தான் செய்யும். ஆனால், அதுதான் உண்மை. திருப்புகழ்ப் பாடல்களை இந்த நூற்றாண்டில் பரப்பிய வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள், முதன்முதலாக, இந்தத் திருப்புகழ்ப் பாடலைத்தான் பழநி திருக்கோயிலில் ருத்ர கணிகை ஒருத்தி (தேவரடியாள்) பாடி, ஆடக் கேட்டு, அது திருப்புகழ் என அறிந்தார். “இனி, திருப்புகழைப் பரப்புவதே எனது பிறவிப் பணி’’ எனக்கொண்டார். இவ்வாறு, இந்தத் திருப்புகழ்ப் பாடல், இன்று தமிழகமெங்கும் இசை பரப்ப, முதல் ஒலியாக விளங்கியது. இத்தகைய சிறப்புடைய திருப்புகழ், திருச்செங்காட்டங்குடி தலத்திற்குரியது என்பதை நினைக்கும்போது, திருவருளின் மாண்பினை நாம் மேலும் வியக்க வேண்டியதாகிறது. திருச்செங்காட்டங்குடி என்றவுடன் நமக்கு சிறுத்தொண்ட நாயனார் வரலாறு நினைவுக்கு வரும். தன் மகன் சீராளனைக் கறி சமைத்து, உத்திராபதியாக வந்த சிவபிரானுக்குப் படைத்த பெருமைமிக்க சிறுதொண்டர் கதை, சிவபக்தர்கள் அனைவரும் அறிந்த கதை. பின்னர் அந்தப் பிள்ளை பரமன் அருளால் உயிர் மீண்டு ஓடி வந்தான்.
திருச்செங்காட்டங்குடி எனப்பெயர் வரக்காரணம்?
சத்தியாஷாட முனிவரது தவத்தை ரத்தநாமுகி, ரக்தபீஜன் என்னும் அசுரர்கள் அழிக்க முயன்றபோது, சிவபெருமான் அவர்களை வதம் செய்து அருள் புரிந்தார். அவர்களது ரத்தம் சிந்திய இடமே ரத்தக் காடாகி, செங்காடு என்றாயிற்றாம். இது தலபுராணம் கூறும் செய்தி. மற்றொரு புராணக் கதையின்படி, கயமுகனை இத்தலத்தில் அழித்தபோது அவன் ரத்தம் பெருகி செங்காடு என்ற பெயர் வந்ததாம். அசுரனைக் கொன்ற பாவம் நீங்க, விநாயகர் இத்தலத்தில் சிவபிரானை வழிபட்டதால் கணபதீச்சுரம் என்ற பெயரும் ஏற்பட்டது. இங்குள்ள சிவனுக்கும் கணபதீச்சுரர், உத்திராபதீசுவரர் என்று பெயர்கள். இறைவி: சூளிகாம்பாள். சூளி என்றால் கூந்தல். அதனால் இவருக்கு ‘திருக்குழல் நாயகியம்மை’ என்று தமிழில் பெயர்.
உத்திராபதியார் திருவுருவம் இங்கே தனிச்சிறப்புடையது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இப்பதிக்கு வந்து இறைவனை வணங்கி, பதிகம் பாடியுள்ளனர். தல விருட்சம் - ஆத்தி. இத்தலத்திற்கு சம்பந்தர் வந்தபோது சிறுத்தொண்ட நாயனார் அவரை வரவேற்று உபசரித்ததாகப் பெரிய புராணம் தெரிவிக்கிறது. இத்தலத்தில், அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமான், இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம், பல்லாயிரம் பக்தர்கள் திரள, இங்கு நடைபெறும் அமுது படையல் திருவிழா, வெகு கோலாகலம்! திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.
ஆர்.சி. சம்பத்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்