Meine Blog-Liste

Freitag, 27. Oktober 2023

குமாரஸ்தவம் - மந்திரங்கள்,

 குமாரஸ்தவம் - மந்திரங்கள்,

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்
ஓம் ஷண்முக பதயே நமோநமஹ
ஓம் ஷண்மத பதயே நமோநமஹ
ஓம் ஷட்கிரீவ பதயே நமோநமஹ
ஓம் ஷட்கிரீட பதயே நமோநமஹ
ஓம் ஷட்கோண பதயே நமோநமஹ
ஓம் ஷட்கோச பதயே நமோநமஹ
ஓம் நவநிதி பதயே நமோநமஹ
ஓம் சுபநிதி பதயே நமோநமஹ
ஓம் நரபதி பதயே நமோநமஹ
ஓம் ஸூரபதி பதயே நமோநமஹ
ஓம் நடச்சிவ பதயே நமோநமஹ
ஓம் ஷடக்ஷர பதயே நமோநமஹ
ஓம் கவிராஜ பதயே நமோநமஹ
ஓம் தபராஜ பதயே நமோநமஹ
ஓம் இஹபர பதயே நமோநமஹ
ஓம் புகழ்முநி பதயே நமோநமஹ
ஓம் ஜயஜய பதயே நமோநமஹ
ஓம் நயநய பதயே நமோநமஹ
ஓம் மஞ்சுள பதயே நமோநமஹ
ஓம் குஞ்சரீ பதயே நமோநமஹ
ஓம் வல்லீ பதயே நமோநமஹ
ஓம் மல்ல பதயே நமோநமஹ
ஓம் அஸ்த்ர பதயே நமோநமஹ
ஓம் சஸ்த்ர பதயே நமோநமஹ
ஓம் ஷஷ்டி பதயே நமோநமஹ
ஓம் இஷ்டி பதயே நமோநமஹ
ஓம் அபேத பதயே நமோநமஹ
ஓம் ஸூபோத பதயே நமோநமஹ
ஓம் வ்வியூஹ பதயே நமோநமஹ
ஓம் மயூர பதயே நமோநமஹ
ஓம் பூத பதயே நமோநமஹ
ஓம் வேத பதயே நமோநமஹ
ஓம் புராண பதயே நமோநமஹ
ஓம் பிராண பதயே நமோநமஹ
ஓம் பக்த பதயே நமோநமஹ
ஓம் முக்த பதயே நமோநமஹ
ஓம் அகார பதயே நமோநமஹ
ஓம் உகார பதயே நமோநமஹ
ஓம் மகார பதயே நமோநமஹ
ஓம் விகாச பதயே நமோநமஹ
ஓம் ஆதி பதயே நமோநமஹ
ஓம் பூதி பதயே நமோநமஹ
ஓம் அமார பதயே நமோநமஹ
ஓம் குமார பதயே நமோநமஹ
குமாரஸ்தவம் - மந்திரபூர்வமானது என்பார்கள். இதில் முருகனின் மகிமையோடு வேல், மயில் மற்றும் தேவியரின் சிறப்புகளும் கூறப்படுகின்றன. ஆகவே, உள்ளம் உருக இந்தப் பாடலைப் பாடி வழிபடுவதன்மூலம் கந்தனின் கருணையோடு தேவியரின் அருட்கடாட்சத்தையும் பரிபூரணமாகப் பெறலாம். தெய்வானை தேவி நம் பிள்ளைச் செல்வங்களைக் காத்தருள்வாள்; வள்ளிப் பிராட்டி நம் வாழ்வில் வளம்சேர்ப்பாள். வேலும் மயிலும் நம் குடும்பத்துக்கு என்றென்றும் துணை நிற்கும்.
ஓம் ஷண்முக பதயே நமோ நம:
கருத்து: ஆறுமுகப்பெருமானே, தலைவனே உம்மை வணங்குகிறேன்.
ஓம் ஷண்மத பதயே நமோ நம;
காணாபத்யம், சாக்தம், சைவம், வைணவம், கவுமாரம், சவுரவம் முதலான ஆறு வகை சமயங்களுக்கும் தலைவனாகத் திகழும் முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
எல்லா திசைகளையும் பார்க்கும் வண்ணம் உள்ள அழகான ஆறு திருக்கழுத்தை உடைய குகனே உம்மை வணங்குகிறேன்.
ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம:
அழகான ஆறுமுகங்களுக்கு ஏற்றவாறு நல்ல அமைப்புடன் கூடிய ஆறு கிரீடங்களை அணிந்துள்ள, அழகே உருவான முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.
ஓம் ஷட்கோண பதயே நமோ நம:
அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளி, அதில் அதிதெய்வமாக விளங்கும் குமரப்பெருமானே, உம்மை வணங்குகிறேன்.
ஓம் ஷட்கோச பதயே நமோ நம:
ஆறு விதமான தோத்திரங்களின் உட்பொருளாகவும் அதனால் உணர்த்தப்படுபவனாகவும் விளங்கும் நாயகனுக்கு நமஸ்காரம்.
ஓம் நவநிதி பதயே நமோ நம:
ஒன்பது விதமான செல்வங்களுக்கு உறைவிடமாகவும் அவற்றின் தலைவனாகவும் விளங்கும் சுவாமிக்கு நமஸ்காரம்.
ஓம் சுபநிதி பதயே நமமோ நம:
தன்னை வணங்குவோருக்கு மிகவும் பெரிய இன்பமான முக்தி இன்பத்தை வழங்கும் நாயகனுக்கு நமஸ்காரம்.
ஓம் நரபதி பதயே நமோ நம:
மக்களின் அரசனான கந்தவேலுக்கு நமஸ்காரம், மதுரை மீனாட்சி - சோமசுந்தரரின் மைந்தன் ஆதலால், முருகன் மன்னாதி மன்னன் ஆவான்.
ஓம் சுரபதி பதயே நமோ நம:
தேவராஜனான தேவேந்திரனுக்கு ஆட்சியைத் திருப்பி வழங்கிய தேவர்களின் நாயகனுக்கு நமஸ்காரம்.
ஓம் நடச்சிவ பதயே நமோ நம:
நடனமாடும் ஆறுமுகச் சிவனுக்கு நமஸ்காரம். தந்தை சிவ பெருமான் சிதம்பரத்தில் நடனமாடுவது போல முருகப்பெருமானும் தகராகாச நடனம் செய்பவர் ஆகவே, குகனும் கூத்தபிரான் ஆவார்.
ஓம் ஷடாக்ஷர பதயே நமமே நம:
ஆறெழுத்து மந்திரத்தின் இறைவனான முருகனுக்கு நமஸ்காரம்.
‘முக்தி தந்து அனுதினம் முழுபலன் நல்கச் சத்தியமாவது சரவண பவவே ’ என அருளியுள்ளார் பாம்பன் சுவாமிகள். ஆகவே, தினமும் சரவணபவனையும் சரவணபவ மந்திரத்தையும் துதித்துப் போற்ற வேண்டும்.
ஓம் கவிராஜ பதயே நமோ நம:
கவிராஜ ராஜனான முருகப்பெருமானுக்கு வணக்கம். திருஞான சம்பந்தரை முருகனின் அம்சம் என்பார்கள். முருகப் பெருமானே, கவிராஜ பெருமானாக - திருஞான சம்பந்தராக அவதரித்து வந்து சமணர்களை வென்று சிவனடியார்களின் துன்பம் தீர்த்தாராம்.
‘உபயகுல தீபதுங்க விருது கவிராஜ சிங்க
உரைபுகலி யூரிலன்று வருவோனே ’
எனும் பாடலும் பாடலும் முருகனைக் கவிராஜனாகப் போற்றுகிறது.
ஓம் தபராஜ பதயே நமோ நம:
தவம் புரிகின்றவர்களைக் காக்கும் இறைவனுக்கும், நமஸ்காரம்.
அகத்தியர், நக்கீரர், பராசரர், அருணகிரியார், சிதம்பரர், ராமலிங்கர், நாரதர் போன்ற தப ராஜர்க்களுக்குத் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம். மாதவம் புரியும் அடியார்களை முருகப்பெருமான் காத்தருள் செய்கிறார்.
ஓம் இகபர பதயே நமோ நம:
இகம் - இம்மை; பரம் - மறுமை. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனான முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.
முருகப்பெருமான் இம்மைக்குத் தேவையான அறம், பொருள், புகழ், போகம் ஆகியவற்றையும், மறுமைக்குத் தேவையான முக்தியையும் அருள்பவர். ஆகவேதான் அருணகிரிநாதர், ‘இகபர சவுபாக்கியம் அருள்வாயே ’ எனப் பாடுகிறார்.
ஓம் புகழ் முனி பதயே நமோ நம:
புகழ்முனியாம் திருப்புகழ் முனிவர் அருணகிரியாரின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.
ஓம் ஜய ஜய பதயே நமோ நம:
தன்னை வணங்கும் அடியார்களுக்கு எப்போதும் வெற்றியைத் தந்து வெற்றித் தலைவனாக இருக்கும் முருகனுக்கு நமஸ்காரம். தன் அடியார்களுக்கு எப்போதும் வெற்றியையே அருள்பவர் முருகுப்பெருமான். ஆகவே, அவர்கள் எதற்கும் அச்சம்கொள்ளத் தேவையில்லையாம். சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார் துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார். கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல் அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே. -எனப் பாடுகிறார் அருணகிரியார். அதாவது கந்தரலங்காரத்தின் பாடல் ஒன்றை தெரிந்துகொண்டால் போதும்; அந்த அடியவர் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்பது அருணகிரியாரின் வாக்கு. ஆக, அப்படியான அபயம் வழங்கும். வெற்றிகள் நல்கும் கந்தவேளுக்கு நமஸ்காரம் என்று போற்றுகிறது. குமாரஸ்தவத்தின் இந்த வரி.
ஓம் நயநய பதயே நமோ நம:
மிக்க இனிமையானவர்களான தம் பக்தர்களுக்கு, எப்போதும் இனிமை செய்யும் தலைவனுக்கு நமஸ்காரம்.
ஓம் மஞ்சுள பதயே நமோ நம:
அழகே உருவான தலைவனுக்கு வணக்கம். முருகன் என்றாலே அழகன் என்றுதானே பொருள் சொல்ல முடியும். அவனை நேரில் தரிசித்த பாக்கியம் பெற்றவர் அருணகிரியார். அவர் முருகப்பெருமானின் அழகை எங்ஙனம் போற்றுகிறார் என்று பாருங்கள். ‘மாயோன் மருகனை மன்றாடி மைந்தனை வானோர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினிம் சேலார் வயற் பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’-முருகனின் அழகைப்பருக கண்ணிரண்டு போதாது. அழகன் முருகனை ஆசைதீர தரிசித்து மகிழ வேண்டுமெனில் நாலாயிரம் கண்கள் தேவை, அதைக் கொடுக்கத் தவறிவிட்டாரே பிரம்மதேவன் என்று அங்கலாய்க்கிறார் அருணகிரியார். எனில், அழகுக்கு அதிபதி முருகன் என்பது உண்மைதானே?!
ஓம் குஞ்சரி பதயே நமோ நம:
தேவ குஞ்சரியான தெய்வானையின் நாயகனுக்கு வணக்கம். திருமால் வியர்வையில் உதிர்த்த அமுதவல்லி, முருகனை மணம் புரிய வேண்டி தவம் இருந்து, அதன் பலனாக குழந்தையாகப் பிறந்து தேவேந்திரனுக்கு மகளாகி, ஐராவத யானையால் வளர்க்கப்பட்டாள். அந்த தேவ குஞ்சரத்தால் வளர்க்கப்பட்டதால் அவளுக்கு தேவகுஞ்சரி - தெய்வ யானை என்று பெயர் வந்தது. சூரசம்ஹாரத்துக்குப் பிறகு முருகப்பெருமானுக்குத் தன் மகளான தேவகுஞ்சரியை மணம் செய்து வைத்தான் இந்திரன். இப்படி, தேவகுஞ்சரியின் தலைவனாகிவிட்ட முருகனை நாமும் நாளும் வணங்கி நலம் பெறுவோம்.
ஓம் வல்லீ பதயே நமோ நம:
வள்ளி அம்மையின் நாயகனாகிய முருகனுக்கு வணக்கம். திருமால் வியர்வையில் உதித்த சுந்தரவல்லி, முருகனை மணக்க வேண்டி நெடுங்காலம் தவம் இருந்தாள். அவளைப் பூலோகத்தில் பிறக்கப் பணித்தார். முருகப்பெருமான். அவளும் பூமியில் வள்ளிக் கிழங்கு அகழ்ந்தெடுத்த குழியில் குழந்தையாகத் தோன்றி, வேடன் நம்பிராஜனால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். தக்க தருணத்தில் முருகப்பெருமான் அருளாடல் புரிந்து அவளை மணந்துகொண்டார். அப்படி, செம்மான் மகளைக் கவர்ந்து மணந்த பெம்மான் முருகனை நாமும் வணங்கி வழிபட வேண்டும் என அறிவுறுத்துகிறது இந்த வரி.
ஓம் மல்ல பதயே நமோ நம:
மல்லர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம். ஒருமுறை, பரசுராமரை மற்போரில் வெற்றி பெற்றாராம் முருகப்பெருமான். ‘பொங்கு வெங்குருதி மெத்த குதி கொள்ள வெம் சூரனைவிட்ட சுட்டியிலே குத்தி தரம்கொண்டு அமராவதி கொண்ட கொற்றவனே (கந்தரலங்காரம் பாடல் 35).
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:
வேலாகிய தெய்விகப் படையின் தலைவனுக்கு வணக்கம். அந்த வேல் நடுவில் விசாலமும் நுனியில் கூர்மையும் ஆனது. முருகனை வணங்குவோர் கூரிய அறிவு கொண்டவர் ஆவோர்.
‘வேலை வேண்டுவதே என் வேலை’
‘திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே ’ என தினமும் போற்றி வழிபடுவோம்.
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:
சஸ்திரம் எனப்படும் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.
போரில் கரத்தில் இருந்து விடுபடும் (ஏவப்படும்) ஆயுதம் அஸ்திரம் எனப்படும். வாள் போன்ற கை விடாப் படைகளுக்கு சஸ்திரம் என்று பெயர். இத்தகைய கை விடாப் படைகளைத் தனது கைகளினால் மேன்மையுறச் செய்த தலைவன் முருகனே ஆவான்.
ஓம் சஷ்டி பதயே நமோ நம;
புகழ்பெற்ற சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத நாயகனுக்கு வணக்கம், ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாள்களுக்கு சஷ்டி விரதத்தை மக்கள் அனுஷ்டிப்பார். தீயதை வென்று நல்லதை நிலைநாட்டிய இந்த சஷ்டி விரதத்தை நாமும் கடைப்பிடித்தால் நம்மைப் பிடித்த தீயது அத்தனையும் ஒழியும். நன்மைகள் பல உண்டாகும். நாம் விரும்பியது எல்லாம் நடக்கும். இந்த சஷ்டி விரதத்தின்போது சஷ்டி நாயகனாம் முருகனை வழிபடுவதும், கந்த புராணத்தைப் படிப்பதும் கேட்பதும் மிகவும் நன்மை பயக்கும்.
ஓம் இஷ்டி பதயே நமோ நம:
சிவாகம நெறிப்படி செய்யும் யாகங்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம். நம் இஷ்டங்கள் எல்லாம் இறைவனை முழு மனதுடன் உருக்கத்துடன் யாகம். செய்வதால் நிறைவேறுகின்றன என்பதால், வேள்விக்கு இஷ்டி என்று ஒரு பெயர் உண்டு.
ஓம் அபேத பதயே நமோ நம:
சத்தான சிவத்தினைச் சித்தான சக்தியினின்றும் வேறாக விளங்காமல் ஒன்றாய்க் காட்சியளிக்கும் இறைவனுக்கும் வணக்கம். வேற்றுமை அற்ற தலைவனான முருகனுக்கு வணக்கம். விருப்பு, வெறுப்பு, சிறிது, பெரிது, அகம், புறம், இல்லார், உள்ளார் போன்ற வேற்றுமை அற்ற குகனுக்கு - வேற்றுமை பார்க்காத குமரனுக்கும் நமஸ்காரம்.
ஓம் சுபோத பதயே நமோ நம:
மெய்ஞ்ஞானத்தை அளிக்கும் வள்ளலுக்கு வணக்கம்.
சத்து + சித்து + ஆனந்தம் = சச்சிதானந்தம், சத்தான சிவத்தையும் சித்தான சக்தியையும் ஆனந்தமாக உணரும் மெய்ஞ்ஞானம் பெற்றவர்களுக்குப் பிறவிப் பெருங்கடல் வராது. அத்தகைய மெய்ஞ்ஞானத்தை அளிக்கும் பரம்பொருளான முருகனுக்கு வணக்கம்.
ஓம் வியூஹ பதயே நமோ நம:
சேனைகளின் அணி வகுப்பான வியூகத்தின் படைத்தலைவனுக்கு வணக்கம்.
சூரனின் வதைபடலம் நடந்த போரில் பல வகையான வியூகத்துக்குப் படைத் தலைவனானத் திகழ்ந்த கந்தனுக்கு வணக்கம். கந்தன் என்றால் பகைவர் வலிமையை வற்றச் செய்பவன் என்று பொருள். தேவ சேனாதிபதிக்கு அரோஹரா!
ஓம் மயூர பதயே நமோ நம:
மூல மந்திர ரூபமான பிரணவ மயில், இந்திரனாகிய மயில், சூரனாகிய மயில் என்ற இந்த மூன்று மயில்களின் தலைவனான வேலனுக்கு வணக்கம். முருகன் காட்சி தரும். முன்பு மயில் காட்சி தென்படும். பாம்பன் சுவாமிகள் கால் முறிவு அடைந்தபோது முதலில் அவருக்கு மயில் காட்சி தெரிந்தது. பின் ஒரு குழந்தை அவர் பக்கத்தில் இருந்தது. அந்த மயில் அவருடைய கால் முறிவைச் சரிப்படுத்தியது. குழந்தையாக அவரருகில் நின்ற முருகனும் மயிலும் மறைந்தனர்.
ஓம் பூத பதயே நமோ நம:
பூத கணங்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம், முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தேவ சேனாதிபதியாகப் படையெடுத்துச் சென்றபோது, 1000 பூத கணங்களும் லட்சம் வீரர்களும் படையில் இருந்தனர். அவர்களின் தலைவனாக முருகன் இருந்து போரில் சூரன், தாரகன், சிங்கமுகனை வென்றார்.
ஓம் வேத பதயே நமோ நம:
வேதத்துக்குத் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம்.
ஓம் புராண பதயே நமோ நம:
பழம்பெரும் புராணங்களின் தலைவனான கந்தனுக்கு வணக்கம்.கந்தபுராணம் எல்லா புராணங்களிலும் சிறப்பு வாய்ந்த புராணம். இதைப் படிப்பவர்களுக்கு பல கோடி நன்மைகள் வரும். அவர்கள் நினைத்தது நடைபெறும். அத்தகைய புராணத்தின் தலைவனான முருகனை வணங்கச் சொல்கிறது. இந்த வரி.
ஓம் பிராண பதயே நமோ நம:
ஆன்ம நாதனாகிய முருகனுக்க வணக்கம். இந்த உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் முருகனே உயிர் நாடியாகத் திகழ்கிறார். அவரை வழிபட்டு வரம் பெற வேண்டும்.
ஓம் பக்த பதயே நமோ நம:
பக்தர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம். முருகப்பெருமான் பக்தர்களின் பிரியமானவனாக இருந்து வருகிறான். அருணகிரியார், ராமலிங்க அடிகளார், நக்கீரர், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் முதலான பக்தர்களின் பிரியத்துக்கு உகந்தவனும், அவர்களின் தலைவனுமாகத் திகழும் முருகப் பெருமானை வணங்கிட, நாடி வந்து அருள்புரிவான் முருகன். ஆம்! முருகனை உள்ளமுருக தியானித்து அவன் புகழான திருப்புகழ் பாடி, ஆடி அவனை அடைய முடியும். அப்படிப்பட்ட பக்தர்களில் அருகில் வந்து அவர்கள் குறை தீர்ப்பான் குமரன்.
ஓம் முக்த பதயே நமோ நம:
முக்தியை தரும் முருகனுக்கு நமஸ்காரம்.
சதா சர்வ காலமும் முருகனுடைய பாதத்தை நம் மனதினில் ஏற்றி வழிபடுவோம்; அவரருளால் முக்தி வசப்படும். ‘முடியாப் பிறவிக் கடலில் புகார் ’ எனும் கந்தரலங்காரப் பாடல் வரிக்கேற்ப, மறுபிறவியில் சிக்கிக் கொள்ளாது. முருகனின் திருவடிப்பேற்றைப் பெறலாம்.
ஓம் அகார பதயே நமோ நம:
ஓம் உகார பதயே நமோ நம:
ஓம் மகார பதயே நமோ நம:
ஓம் என்பது பிரணவ மந்திரம். இதில் அ, உ, ம என்று மூன்று எழுத்துக்கள் உள்ளன. ஓ- அகாரம் ஓ -உகாரம் ம- மகாரம்.
இந்த பிரணவத்தின் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம். பிரம்மதேவன் ஆணவத்துடன் முருகனை வணங்காமல் சென்றபோது, அவரது செருக்கை அடக்க முருகன் பிரணவத்தின் அர்த்தத்தை கேட்டான். அதற்கு விளக்கம் அளிக்க முடியாமல் பிரம்மன் விழித்தபோது “படைப்பதற்கு அடிப்பபடையாய் உள்ள பிரணவத்தை பற்றியே அறியாதபோது படைப்புத் தொழில் எங்ஙனம் செய்ய முடியும்” என்று கூறி அவர் தலையில் குட்டி, சிறை எடுக்குமாறு கணங்களிடம் கூறினார். அப்படிச் சிறையில் இருந்தபோது பிரம்மன் அறிவு தெளிந்து செருக்கு அகன்று முருகனை நோக்கி தவம் இருந்தார். பின்னர், திருமால் பிரம்மனை விடுவிக்கும்படி சிவபெருமானை வேண்டிக்கொள்ள, சிவனார் தன் தூதர்களை அனுப்பி பிரம்மனை விடுவிக்கும்படி கூறினார். முருகன் மறுக்க, பெரும் போர் அங்கே நிகழ்ந்தது. தேவர்கள் அத்தனை பேரும் தோற்க, அங்கே எல்லோரையும் ஒரு நொடிப்பொழுதில் முருகன் வீழ்த்தி விட்டார்.
பிரம்மன் படைப்புத் தொழில் செய்யாததால் இருந்த துன்பத்தைப் போக்க தானே படைப்புத் தொழிலைச் செய்தார். அவர் படைத்த உயிர்களின் மேன்மையை எப்படி சொல்லிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. பின் அவர் தொழிலுக்கு ஈடுகொடுக்க முடியமல் திருமாலும் ருத்ரனும் தவித்த்தால், முருகப்பெருமானே காத்தல், அழித்தல் போன்ற தொழில்களைச் செய்து, ‘இவ்வுலகில் முத்தொழிலையும் செய்யும் பரமன் முருகனே ’ என்பதை சந்தேகம் இல்லாமல் நிரூபித்தார்.
பின் சிவபெருமானே நேரில் வந்து பிரம்மனை விடுவிக்கும்படி கூற, மறுகணம் பிரம்மனை விடுதலை செய்ய ஆணையிட்டார் முருகன். பின்னர் சிவனார், ‘பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன ’ என்று உரைக்கும்படி முருகனிடம் கேட்க, ஆசானைப் போல் அமர்ந்து பிரணவப் பொருளை உபதேசித்து, தந்தைக்கு உபதேசித்த ஞானகுரு ஆனார். இந்தக் காட்சியைக் கண்ட தேவர்கள் மெய்சிலிர்த்து ‘சம்போ மஹாவோ! ஞானகுருவே போற்றி!” எனப் பலவாறு இருவரையும் துதித்தனர். இந்த நடந்த இடம் சுவாமிமலை.
அகாரம், உகாரம், மகாரம் என்று பிரிந்த மூன்றும் முறையே ஆக்கல், காத்தல், அழித்தல் என்று முத்தொழில்களையும், அதைச் செய்யும் மூர்த்திகளான அயன் அரி, அரன் என்பவர்களையும் உணர்த்தும். அவர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.
ஓம் விகாச பதயே நமோ நம:
எங்கும் நீக்கமற நிறைத்து இருக்கும் முருகனுக்கு நமஸ்காரம் இட எல்லை, கால எல்லை, பிறப்பு, இறப்பு, மூப்பு என்பவை இல்லாமல் எங்கும் நிறைந்துள்ள குருபதி விகாசி ஆகும். அதற்குத் தலைமையாக எப்போதும் பெரும் மகிழ்வோடு ஒளியகத் திகழும் ஓங்கார குருவுக்கு நமஸ்காரம்.
ஓம் ஆதி பதயே நமோ நம:
உலகில் எல்லா பொருள்களும் படைப்புகளும் தோன்ற காரணகர்த்தவாக விளங்கும் வேலனுக்கு வணக்கம். ‘ஆதி ஆம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க தாது அவிழ் கடப்பன் தாரன் தான் இருநுதலைக் காக்க காக்க சோதி ஆம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்க
கார்த்திகேயன் நாசியை காக்க ’ எனப் போற்றுகிறது சண்முகக் கவசம்.
ஓம் பூதி பதயே நமோ நம:
எல்லா ஐஸ்வர்யத்துக்கும் அண்டங்களுக்கும் நாயகனான முருகனுக்கு வணக்கம். அருட் செல்வம், பொருட் செல்வம், மக்கள் செல்வம் போன்ற பல்வேறு செல்வங்களை அள்ளி அள்ளி வழங்கும் வள்ளலுக்கு நமஸ்காரம் என்று சொல்லி முருகனை வழிபட, அனைத்தையும் அளவின்றி, வழங்குவார் முருகப்பெருமான்.
ஓம் அமார பதயே நமோ நம:
அழிவற்று எங்கும் நீக்கமற நிறைந்துள்ள குமரனுக்கு நமஸ்காரம்.
ஓம் குமார பதயே நமோ நம:
என்றும் குமரனாகிய முருகனுக்கும் வணக்கம். சத்தாகிய சிவத்துக்கும் சித்தாகிய சக்திக்கும் நடுவில் ஆனந்தமாய் சோமாஸ்கந்தராய் வீற்றிருக்கும் முருகனுக்கு நமஸ்காரம். வைகாசி விசாகம், சஷ்டி தினங்கள், தை மற்றும் ஆடிக் கிருத்திகை நாள்களில் இந்தக் குமாரஸ்தவம் துதியைப் பாடி முருகப் பெருமானை வழிபட்டால், சகல சுபிட்சங்களும் உண்டாகும்.
<1>.
Alle Reaktionen:
14

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்