Meine Blog-Liste

Samstag, 7. Oktober 2023

மகாளய பட்சம் ஓர் ஆன்மிகப் பார்வை

 மகாளய பட்சம் ஓர் ஆன்மிகப் பார்வை

--------------------------------------------------------
“கன்யா கதே சவிதரி ஸக்ருத் ஆஷாடாதி பஞ்சம அமர பக்ஷே” சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசைவரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர். மேற்கண்ட பதினைந்து நாள்களில் ஒரு முறையும் அமாவாசையன்று ஒரு முறையும் ஆக இரண்டு முறை தர்ப்பணம்செய்வது சிறப்பு. மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாள்களில் தர்ப்பணம் விடுவது சிறப்பு, இந்நாள்களில் தர்ப்பணம் விட முடியாதவர்கள் மற்ற ஏதாவது ஒரு நாளில் மகாளய பட்சத்திற்குள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மகாளய அமாவாசை
----------------------------------
மகாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதிகம். மகாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கை சிறப்படையும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக மகாளய அமாவாசை கருதப்படுகிறது. 'மகாளயம்' என்றால் 'பெரிய கூட்டம் என்று பொருள்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாள்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
மகாளய அமாவாசையின் சிறப்பு:
---------------------------------------
பொதுவாக ஒவ்வோர் அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் யமதர்மராஜனின் கைகளுக்குச் சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மகாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்குச் சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் பா முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மகாளய பட்சமான பதினைந்து நாள்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்து இருப்பதாக நம்பிக்கை.
இந்த பதினைந்து நாள்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக கோ வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி. எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல, நம் தலைமுறைக்கும் சேர்த்துதான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் .
மகாளய பட்சம் 2023.
-----------------------------------
முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் இந்த வருட 29-09-2023 வெள்ளிக் கிழமை முதல் ஆரம்பம் ஆகிறது. இது முதல் பதினைந்து நாள்களுக்கு மகாளய பட்சம் காலமாகும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். இந்த வருட புரட்டாசி மாதம் அமாவாசை ஐரோப்பா, இங்கிலாந்து நாடுகளில் இலங்கை, இந்தியா போல் 14/10/2023 சனிக் கிழமை வருகிறது.
தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி (தாயார் உயிருடன் இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி), தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர், நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம். சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம்; சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்திருக்கலாம்; சிலர், விபத்து போன்று அகால மரணம் அடைந்திருக்கலாம். அந்த ஆத்மாக்கள் அனைத்தையும் திருப்தி அடையச் செய்வதற்கான சிறந்த நாளே மகாளய பட்சம்.
முன்னோர்களை வரவேற்போம்:
“குர்யாத் அபர பக்ஷிணிய மாஸி ப்ரோஷ்டபதே த்விஜாஹ” (ஸ்ரீமத் பாகவதம் 7.4.19)
ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாள்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.
மகாளய பக்ஷ நாள்களில் கடைப்பிடிக்க வேண்டியவை:
1. தினமும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.
2. தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது.
3. சைவ உணவை மட்டும் சாப்பிட வேண்டும்.
4. உணவில் பூண்டு, வெங்காயம், சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
5. இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
6. நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரே, பூஜைகளை செய்ய வேண்டும்.
7. தர்ப்பணம் செய்பவர்கள், தினமும் தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டில் பூஜை செய்ய விளக்கேற்றி வழிபட்டு அன்றாட பணிகளை தொடங்க வேண்டும்.
சிறப்பு பலன்கள்:
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை போல திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அனைத்து முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். புனித நீர் நிலைகள் கடலுக்குச் சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தித்து வர வேண்டும். வயதில் பெரியவர்களுக்கும் கற்றறிந்த அறிஞர்களுக்கும் ஆடைகள், ஏழைகளுக்கு பசிக்கு உணவு படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் ப்ரீதியடைந்து நம்மை நன்கு ஆசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்களிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். மகாளய பட்சம் காலத்தில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, சத்ரு ஜயம், சுக சம்பத்துக்கள் ஆகியவை கிடைக்கும்.
பித்ரு கர்மாவும் ஜோதிடமும்!
தோஷமான ஜாதகமாக இருந்தாலும் முன்னோர்களின் ஆசி இருந்தால் நல்லவைகள் நடக்கும். அதே நேரத்தில் நம்முடைய ஜாதகம் யோக ஜாதகமாக இருந்து நாம் முன்னோர்களின் சாபத்தோடு இருந்தால் நமக்கு பாதிப்புகள் அதிகமாகும். எனவே நாம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறுவோம். முன்ஜன்ம புண்ணியம் நாம் நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல நிலையில் வாழ்வது நம் முன்னோர்கள் செய்த புண்ணியம். எனவேதான் பெற்றோர் செய்த புண்ணியம் தான தர்மங்கள், பிள்ளைகளைச் சேரும் என்றார்கள். நம் முன்ஜன்மத்திலும் செய்த புண்ணிய கணக்குதான் இந்த ஜன்மத்தில் நமக்கு நல்லவைகளையும் அதிர்ஷ்டத்தையும் தருகிறது. எனவே ஒருவருக்கு பூர்வ புண்ணியம் நன்றாக அமைந்துவிட்டால் அவருக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
பித்ரு தோஷம்
பித்ரு தோஷம் நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு கேதுகளுக்குடன் எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷமாகும். ஜாதகத்தில் ராகு-கேது 1, 5, 7, 9 இடங்களில் இருந்தாலும் அது பித்ரு தோஷம் ஆகும். ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும்.
பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது. சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். ஒருவரின் ஜாதகத்தில் கிரகநிலைகள் யோகநிலையில் இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள். எனவே மகாளய பட்ச காலத்திலும் வரும் மகாளய அமாவாசையிலும் தானம் செய்வோம் பித்ரு கடன் நிறைவேற்றுவோம். தானம் கொடுத்து சாபம் நீங்கப்பெறுவோம்.
பித்ரு கர்மவிற்க்கான சிறப்பு தலங்கள்!
முன்னோர் தர்ப்பணத்துக்குக் கடல் மற்றும் நதி தீரங்களும் தீர்த்தக்கரைகளும் விசேஷமானவை. ஸ்ரீ ராமன், தன் தந்தைக்கான பித்ரு கடன்களை காட்டில் இருந்தபடியே செய்து நமக்கு வழி காட்டியுள்ளார். ஸ்ரீ ராமன், ராவண வதம் செய்த பிறகு சிவ பெருமானைக் குறித்து பூஜை செய்த ராமேஸ்வரம் எனும் க்ஷேத்திரத்தில், இந்த மகாளயபட்ச அமாவாசை நாளில், இலங்கையில் தர்ப்பணங்கள் போன்றவை செய்ய தீர்த்தக் குளக்கரை,சமுத்திரக்கரை,கீரிமலை,மாமாங்கம்,திருவடிநிலை போன்ற இடங்கள் தர்ப்பணம் அளிக்க உகந்த இடங்கள். இந்த நாட்களில் இந்தியாவில் காசி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தனுஷ்கோடி, வேதாரண்யம், கோடியக்கரை, காவிரி ஆறு உள்ளிட்ட புனித இடங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வாழையடி வாழையாக நம் வம்சம் தழைத்தோங்கும். நம் முன் வினை பாவங்கள் நீங்கி, பித்ருக்களின் ஆசியால் வளமும், மன நிம்மதியும் கிடைக்கும்.
புலம்பெயர் நாடுகளில் உள்ளோர் அருகில் அமைந்துள்ள ஆலயங்களில் தர்ப்பப்ணம் செய்து நெய்தீபமேற்றி அர்ச்சனை செய்து அரிசி,நல்லெண்ணெய்,காய்கறி,பருப்பு முதலான தானஞ்செய்து பிதுர்வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
புண்ணிய க்ஷேத்திரங்களுக்கோ, புண்ணிய நதிக்கரைகளிலோ செய்ய முடியாதவர்கள், அவரவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள ஆலயங்களில் தங்களது கடமையை நிறைவேற்றலாம். இறந்துபோனவர் குழந்தை இல்லாதவர் எனில், அவருடைய மனைவியானவர் சாஸ்திரிகளிடம் தர்ப்பணம் செய்யச் சொல்லலாம். இதேபோல், ஆண் குழந்தைகள் இல்லாத நிலையில், அந்த வீட்டின் பெண் குழந்தைகள் தங்களின் தந்தைக்காக, பெற்றோருக்காக வேறு ஒருவரை நியமித்துக் கடமையை நிறைவேற்றலாம்.
தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, 'ஏஷாம் ந மாதா ந பிதா... குசோதகை:’ என்று மந்திரம் சொல்லச் சொல்வார்கள். 'எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ... இதுபோன்று யாருமே அற்ற அநாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நமது சாஸ்திரம். அவ்வாறே கடைப்பிடித்து நலம் பெறலாம்!
நன்றி!
"வித்யாவாரிதி" சுப்ரமண்ய சாஸ்திரிகள்
Alle Reaktionen:
Jano Jeyaratnam und 12 weitere Personen

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்