கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்தது. நேற்று ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அதற்கான சான்றிதழை வழங்கினர்.
சிவலிங்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதியான உதயம்குளம்கரைப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு உலகில் மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்க இந்த ஆலயத்தின் நிர்வாகம் முடிவு செய்தது. மஹேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் இந்தியாவின் பல்வேறு சிவன் கோயில்களில் சென்று அந்தக் கோயில்களின் மாதிரியைக் கொண்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
குமரி மாவட்ட ஆலயம்
111.2 அடி உயரத்தில் எட்டு அடுக்காக சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்களைக்கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும், பரசுராமர், அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும், கடவுள்கள் சிற்ப வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலையும், மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடிகொண்டிருப்பது போன்று அழகிய சிலையுடன் சிறந்த கட்டடக் கலையுடன் கட்டப்பட்டுள்ளது.
தற்போது 80 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ள இந்த சிலை உலகில் மிக உயரமான சிவலிங்கம் என்று தேர்வாகி, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது தலைமையிலான அதிகாரிகள் நேற்று சிவலிங்கத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கேரள பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜகோபால் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்தச் சிலை வரும் மகா சிவராத்திரி அன்று திறக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.
உற்று -விகடன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen