Meine Blog-Liste

Samstag, 23. April 2022

ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருமறைக்காடு.# வேதங்கள் வணங்கிய திருத்தலம்

 #ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருமறைக்காடு

#வேதங்கள் வணங்கிய திருத்தலம்

#worldkovi.com

வேதங்கள் வணங்கிய திருத்தலம்

ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருமறைக்காடு
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

வேதங்கள் வணங்கிய திருத்தலம். சப்த விடங்கத் திருத்தலங்களுள் ஒன்று. தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் என்ற பெருமையை உடைய வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம். இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார்.

இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இத்தலத்தில் உள்ள இறைவி யாழினும் இனிய மொழியாள் என்று அழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தை விட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள்.

துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.



இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது. இராமர் பூஜித்த இராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்திலுள்ளது. இராமர் இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால் இத்தலத்திலுள்ள விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி கோவிலின் மேற்கு வெளிப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது. இச்சந்நிதிக்கு கொடிமரமும் உள்ளது. இதற்கு அருகில் மேலக்குமரன் சந்நிதியும் உள்ளது.

இத்தலத்தில் உள்ள இந்த முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றவர். இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில் காட்சி அளிக்கின்றன. முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும் கோவிலில் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.



இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் உள்ளன. முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம்.

கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் விசேஷமாக கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.



ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.

இக்கோவிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு.



அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் தான்
திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU

🎉 Sri Kamakshi Ampal Temple Theerfestival Hamm, Germany 2025#தேர்த்திர...

ஐரோப்பாவில்