Meine Blog-Liste

Montag, 19. August 2019

அத்திவரதர் வைபவம் 2019

அத்திவரதர் வைபவம் 2019
Ganesan S


புராணத்தின் படி பிரம்மன் நடத்திய யாகத்தில் நெருப்பினால் ஏற்பட்ட வெப்பம் தகிக்க முடியாததால் தனது அத்தி வரதர் திருமேனிக்கு தினந்தோறும் 108 சங்கு தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும் என திருமால் கூறினார். அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாளுக்கு அவர் கூறியவாறே சிறிது காலம் மட்டும் அபிஷேகங்கள் செய்து, பிறகு அது முடியாமல் போக என்நேரமும் நீராழி சயனம் கொள்ளத்தக்க வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் அத்தி வரதரை அனந்த சயனம் கொள்ளும்படி செய்து, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து அத்தி வரதர் பெருமாளுக்கு வைபவம் நடத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டிற்கான அத்தி வரதர் வைபவம் தற்போது 48 நாட்கள் நடைபெற்று முடிந்தது. அப்போது நடைபெற்ற ஒரு அதிசய நிகழ்வு பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்!!!.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று நேற்று நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலம் காஞ்சிபுரம் நகரத்தில் கடுமையான வெப்பம் இருந்தது. அந்த கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்து சென்றனர். இந்நிலையில் அத்திவரதர் வைபவத்தின் 47-வது நாள் இரவு முதலே காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியிருக்கும் மாவட்டப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதுகுறித்து 1979-ம் ஆண்டு அத்தி வரதர் வைபவத்தில் பங்கேற்ற காஞ்சிபுரத்தில் வசிக்கின்ற வைணவ பட்டாச்சாரியர் ஒருவர் மற்றும் அவரது மனைவியும் சில தகவல்களை தெரிவித்தனர். கடந்த 1979-ம் ஆண்டு நடை பெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு பெறும் சமயத்தில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திலேயே சயன கோலத்தில் வைக்கப்பட்ட அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்றும், அப்போது பக்தர்களிடம் கோயில் பணிகளுக்காக 50 பைசா முதல் ரூ.1 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் கூறினார். அதே போன்று 1979 ஆம் ஆண்டு அத்திவரதர் அனந்த சரஸ் குளத்தில் சயனிக்க சென்றது ஒரு சனிக்கிழமை தினம் தான் என்றும் அதே போல இம்முறையும் சனிக்கிழமையில் நீராழி மண்டபத்தில் அத்திவரதர் சயனிக்க சென்றது ஒரு ஆன்மீக ஆச்சர்யம் தான் எனக் கூறினார்!!!.
அத்தி வரதர் வைபவத்தில் பங்கேற்ற வைணவ பட்டாச்சாரியார் கூறும் போது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 1979 ஆம் ஆண்டு அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த பிறகு மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குள் சயனிக்க வைக்கப்பட்டார். அவர் சயனிக்க வைக்கப்பட்ட அன்றைய தினம் இரவு தொடங்கி தொடர்ந்து 2 நாட்களுக்கு காஞ்சிபுரம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்தது என கூறினார். இம்முறை ஒருநாள் முன்னதாகவே மழை பொழிய தொடங்கியுள்ளது. அத்தி வரதர் வைபவத்தின் 48 நாட்களை ஒரு மண்டல கணக்காக கொண்டு இத்தருணத்தில் மழை பெய்ய தொடங்கியுள்ளது அத்தி வரதர் பெருமாளின் தெய்வீக கணக்கு என தெரிவித்தார். மேலும் அந்த அத்தி வரதரின் அருளால் இப்போது பெய்கின்ற இந்த மழையிலேயே அனந்த சரஸ் குளம் நிரம்புவதோடு, தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும் என்பது தன்னுடைய மற்றும் அனைத்து மக்களின் விருப்பம் எனக் கூறினார்!!!

சிவகங்கை கணேசன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்