மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளே ஒரு முறை பொன்னமராவதிக்கு வருகை தாருங்கள் நன்மையே நடக்கும் வரலாற்று சிறப்பு திருத்தலங்கள்.
மே.22
தோல்வியாதி நீக்கும் பிரான்மலை கொடுங்குன்ற நாதர்..
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியடுத்த பரம்புமலை என்ற பிரான்மலை ஆகும். கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்த பகுதியில் இயற்கை சூழலில் அமைந்த தலம் இது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலம் இதுவாகும்.
Kodunkundranathar siva Temple Piranmalai
தேவாரச் சிறப்பு
மயில்புல்குதண் பெடையோடு உடனாடும் வளர்சாரல் குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக் கொடுங்குன்றம் அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்தி நின்றாடி எயில்முன்பட எய்தானவன் மேயல்வெழில் நகரே" என்ற திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் 5வது தலமாகும்.
இக்கோயில் சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது. மூன்றடுக்கு சிவன் கோவிலான இம்மலைக்கோவிலில் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் சிவபெருமான் காட்சி தருகிறார்.பாதாளத்தில் உள்ள கோவிலில் கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அருள் பாலிக்கிறார்கள். பூலோகம் என சொல்லப்படும் மத்தியில் உள்ள கோவிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதரும் அருள் பாலிக்கிறார்.
மேல்நிலை கோவிலாக கைலாயம் எனப்படும் இங்கு தேனம்மை என்ற அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார்.
கைலாயம் எனப்படும் மேலடுக்கில் உள்ள சன்னதி குடவரைக் கோவிலாக அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மங்கைபாகர் அம்பிகையுடன் இணைந்து அகத்தியருக்கு திருமண காட்சியை அருளிய கோலத்தில் காட்சி தருகிறார். இதை சிவனின் அன்னியோன்ய கோலம் என்கிறார்கள்.
தேனம்மை என்ற இறைவியின் பேருக்கிணங்க தேனடைகள் நிறைந்திருக்கின்றன. இங்கு பாதாளத்தில் அமைந்துள்ள கொடுங்குன்றநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்த திருக்கோயிலில் ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதை காண்பது அபூர்வம்.
சிற்பச் சிறப்பு:
சன்னதியின் முன்புற மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் காணச்சென்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மங்கைபாகர் மூர்த்தம் நவமூலிகைச் சாற்றால் செய்யப்பட்டதாகும். எனவே இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. பெளர்ணமியன்று காலையில் நவபாஷாண சிலைக்கு புணுகு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர். அதே சன்னதியில் காசிராஜன் கொடுத்த உடையவர்லிங்கம் என்ற சிறிய லிங்கம் இருக்கிறது. மங்கைபாகருக்கு அபிஷேகம் கிடையாது என்பதால் அவருக்கு செய்ய வேண்டிய அபிஷேகங்கள் அனைத்தும் இந்த லிங்கத்திற்கே செய்யப்படுகிறது.
தனிச் சிறப்பு:
குறிஞ்சி நிலத்தில் அமைந்த கோயில் என்பதால் இத்திருக்கோயிலில் இந்த நிலத்திற்குரிய தேன், திணைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த பொருள்களை நெய்வேத்யமாக படைக்கின்றனர். மற்ற சிவன் கோவில்களில் போல் சன்னதியின் எதிரில் நந்தி இக்கோவிலில் கிடையாது. சிவன் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்த போது நந்தி தேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார் என்ற அடிப்படையில் இங்கு நந்தி நிறுவப்படவில்லை. மேலும் இவ்வாலயத்தில் கொடிமரமும், பலிபீடமும் கிடையாது. மற்ற கோவில்களில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யும் பொழுது சுவாமி சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் மூலிகை மருந்துகள் வைப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் சிவன் சிலைக்கு கீழே இவ்வாறு வைக்கப்படுவது இல்லை.
இவர் முதலும் முடிவும் இல்லாதவராக இருப்பதால் அஷ்டபந்தனம் சாத்தப்படுவதில்லை என்கிறார்கள். இவருக்கு ஒருமுறை அணிவித்த வஸ்திரத்தை மறுமுறை அணிவிப்பது இல்லை. ஒவ்வொரு முறையும் புத்தாடையே அணிவிக்கின்றனர். இத்திருத்தலத்தில் சிவன் கையில் நான்கு வேதங்களை வைத்தபடி காட்சி தருகிறார். எனவே இவருக்கு வேதசிவன் என்ற பெயரும் உண்டு. கல்வியில் சிறப்பிடம் பெற மாணவர்கள் இவருக்கு வெள்ளை நிற மலர்மாலை சாத்தி வெண்நிற வஸ்திரங்களை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.
முருகனின் காட்சி
அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடன காட்சி காட்டியதாக ஐதீகம். இக்கோவிலில் தனி சன்னதியில் இருக்கும் முருகன் வயோதிக கோலத்தில் காட்சி தருகிறார். வழக்கமாக முருகன் சன்னதிக்கு எதிரில் மயில்வாகனம் தான் இருக்கும். ஆனால் இங்கு முருகன் சன்னதிக்கு எதிரில் யானை இருக்கிறது. முருகன் பத்மாசுரனை சம்ஹாரம் செய்ததால் தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இத்தலத்தில் இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றதாக ஐதீகமுண்டு.
இந்த இரு லிங்கங்களே கொடுங்குன்றநாதர் சன்னதி பிரகாரத்தில் சொக்கலிங்கம், இராமலிங்கம் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்கள். பெயரே தெரியாத மரம் ஒன்றின் கீழ் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி யோக நிலையில் சுமார் நாலேமுக்கால் அடி உயரம் கொண்ட திருவுருவச் சிலை இருக்கிறது. இப்பகுதியில் இது போன்ற திருவுருவச்சிலை வேறு எங்கும் காணக்கிடைப்பது இல்லை. இத்திருத்தலத்தின் தலவிருட்சமாக பல நூறாண்டு கண்ட உறங்காபுளி என அழைக்கப்படும் புளியமரம் உள்ளது. இம்மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இத்தலத்தில் பைரவருக்கென தனி சன்னதி உள்ளது.
தீர்த்தச் சிறப்பு
இத்திருக்கோயில் தீர்த்தம் சிறப்பு மிக்கதாகும். இத்தீர்த்தத்தம் குஷ்டவிலக்கி சுனை என்று அழைக்கப்படுகிறது. இச்சுனையின் நீரில் நாள்பட்ட தோல்வியாதி உள்ளவர்கள் இச்சுனையில் குளித்து சிவனை வழிபட்டால் தோல்வியாதி நீங்கும் என்பது ஐதீகம். ஒரு ஏழை மூதாட்டி இத்திருத்தலம் கட்டுவதற்கு தன்னால் முடிந்த ஒரு அணா பணத்தை தந்ததாகவும் அதை வாங்க மறுத்ததால் அதன் பின் கட்டிய கோவிலின் சுவர்கள் நிலைபெறாமல் சரிந்தன. அதையடுத்து அந்த மூதாட்டி கொடுத்த பணத்திற்கேற்ப சிறு கல்துண்டு பதித்தவுடன் சுவர் நின்றதாக கூறுகின்றனர். அதற்கு சான்றாக பைரவர் ஆலயத்தில் பெரிய சுற்றுச்சுவர்களுக்கிடையே சிறு கல்துண்டு நிறுவப்பட்டுள்ளது.
மலையே சிவ வடிவம்
இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் மலையை தூரத்தில் இருந்து கண்ட பொழுது இம்மலையே சிவனாக காட்சி தந்தது. இதையடுத்து அத்தலத்தில் தன் கால் படக்கூடாது எனக்கூறி ஐந்து மைல் தூரத்தில் நின்றே இத்தலம் பற்றி பதிகம் பாடியுள்ளார். எம் பிரான் மலை என சொல்லி பதிகம் பாடினார். எனவேதான் இத்தலம் எம்பிரான்மலை என பெயர் பெற்று பிற்காலத்தில் பிரான்மலை என மறுவியது.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி
இன்றும் இத்தலத்தில் பாரி உற்சவம் என்னும் ஒரு விழா எடுக்கிறார்கள். இவ்விழாவில் முல்லைக்கு தேர் கொடுத்த வைபவம் நடக்கும். பாரி மன்னனின் திருவுருவச் சிலையை ஒரு தேரில் வைத்து பறம்பு மலை அடிவாரத்திற்கு கொண்டு செல்கிறார்கள் அங்கு முல்லைக் கொடியின் அருகில் தேரை நிறுத்திவிட்டு திருவுருவச் சிலையை கோவிலுக்கு திருப்பி கொண்டுவந்து விடுவர். அதன் பின் அப்ப
குதி மக்களுக்கு மன்னர் தானம் செய்யும் படி அரிசி அளப்பு வைபவம் நடக்கும். அப்போது பக்தர்களுக்கு அரிசியை தானமாக தருகின்றனர்.
மூலிகை நிறைந்த மலை
இக்கோவில் திருவண்ணாமலை ஆதினத்திற்குட்பட்ட குன்றக்குடி ஆதீனத்தில் உள்ளது. இந்த பரம்பு மலை சுமார் இரண்டாயிரத்து அடி உயரம் கொண்டது. மலையெங்கும் மூலிகைகள் நிறைந்துள்ளன. சுவாசக்கோளாறுகள் உள்ளவர்கள் இம்மலையேறினால் அதில் உள்ள மூலிகை காற்றை சுவாசிக்க அப்பிரச்சனை தீரும் என்று பக்தர்கள் இன்றும் மலையேறுகின்றனர்.
குறிஞ்சி மலர்கள்
மார்கழி, தை மாதம் குறிஞ்சி மலர்கள் மலையெங்கும் பூத்துக் குலுங்கும். உச்சிமலையில் கார்மேகங்கள் உரசி செல்வது பார்ப்பவர்களை சில்லிட வைக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஆங்கிலேயர்களை பகைத்துக் கொண்டு இங்கு மறைந்திருந்தார் என கூறுகின்றனர். அந்த இடம் ஊமையன்குடம்பு என இன்றும் பெயர் பெறுகிறது.
நினைத்தது நிறைவேறும்
இரும்பால் ஆன பழமை வாய்ந்த பீரங்கி உச்சிமலையில் இருப்பது இத்தலத்திற்கு மேலும் சிறப்பு. இங்கு இருக்கும் சிவனை தரிசித்து மலையில் ஏறி மேலிலுள்ள சுனையில் தீர்த்தம் எடுத்து வேண்டிக்கொண்டால் எண்ணியது ஈடேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
அமைவிடம்
இக்கோவிலுக்கு மதுரையிலிருந்து சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதி செல்லும் பேருந்தில் பிரான்மலை என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். மதுரையிலிருந்தும், திருப்பத்தூரில் இருந்தும் அடிக்கடி பேருந்து வசதி உண்டு.