Meine Blog-Liste

Montag, 25. März 2024

யோகர் சுவாமிகள்

 


யோகர் சுவாமிகள் வைகாசி 29 1872 முதல் பங்குனி 24 1964 வரை ஈழத்தில் வாழ்ந்த சைவத் துறவியும் திருக்கயிலாய பரம்பரையில் நந்திநாத சம்பிரதாயத்தில் வந்த குருபரம்பரையின் 161ஆவது சற்குருவும் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் அம்பலவாணர் - சின்னாச்சியம்மை தம்பதிக்கு மே 29 1872 இல் (தமிழ் நாட்காட்டியில் ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திர நாலாம் பாதத்தில்) ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இளம் வயதிலேயே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையாரால் வளர்க்கப்பட்டார்.
சுவாமிகளுக்கு ஐந்து வயதானது தமது மகனுக்குக் கல்வி கற்பிக்கும் பொறுப்பை தனது தம்பியார் சின்னையரிடம் ஒப்படைத்தார். அக்காலத்தில் சுவாமிகளின் தகப்பனாரின் சகோதரி 'முத்துப்பிள்ளை' என்பவர் கொழும்புத்துறைக்கு அருகிலுள்ள 'பாண்டியன் தாழ்வு' என்னும் குறிச்சியில் வாழ்ந்து வந்தார். அவர் சைவப்பற்று மிக்கவர். தம்மிடம் மருமகன் வரும் பொழுது சைவ நூல்களையும் இதிகாசங்களையும் படிக்க வசதி செய்து கொடுத்தார். அவருடைய சைவப்பற்றுக்கு வித்திட்ட பெருமை முத்துப்பிள்ளையையே சாரும். கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் மேற்படிப்பும் கற்றார்.
கல்வி முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராகப் பணியில் இணைந்து, கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார். கடமையைக் கண்ணாகக் கருதும் சுவாமிகள் எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றார். கிளிநொச்சியில் வேலை பார்க்கும் பொழுது ஓய்வு நேரங்களைத் தியானத்தில் கழித்து வந்தார். மற்றவர்கள் உறங்கும் பொழுது சுவாமிகள் வெகுநேரம் தியானத்தில் ஈடுபட்டு இருப்பது வழக்கம்.
சுவாமிகள் இந்தக் காலத்தில் நூற்றுக்கணக்கான தோத்திரப் பாடல்களை மனனஞ் செய்து கொண்டார். இப்படி ஏராளமான தேவாரம், திருவாசகம், திருமந்திரம், அருணகிரிநாதர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள் முதலியவற்றை மனப்பாடஞ் செய்தார். தாயுமாவர் பாடல்களிலும் சுவாமிகளுக்கு ஈடுபாடு அதிகம். அவற்றைத் தமது நற்சிந்தனைகளிலும் திருமுகங்களிலும் எடுத்தாண்டுள்ளார். சுவாமிகளின் நற்சிந்தனை வசனப்பகுதியில் காணப்படும் பின்வரும் வரிகள் 'சிவதொண்டன்' நிலையத்தின் இலட்சியங்களை விளக்குகின்றன. 'சொல்லெல்லாம் மோனம் - தொழிலாதியும் மோனம் எல்லாம் தன் மோன நிறைவே'
செல்லப்பா சுவாமிகள்
நல்லூர்த் தேரடியில் முதன்முதலாக செல்லப்பா சுவாமியைக் கண்ட நாளிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. சதாசிவத்தை ஆழமான கண்களால் ஊடுருவி, யாரடா நீ என்று கேட்டு, ஒரு பொல்லாப்பும் இல்லை!' என்ற வார்த்தைகளை செல்லப்பா சுவாமிகள் உதிர்த்த கணம், சதாசிவத்தின் மனம் லௌகிக வாழ்க்கையை உதறியதாகச் சொல்லப்படுகின்றது. பின் ஐந்து ஆண்டுகள் அவரிடம் சீடனாக வாழ்ந்த சதாசிவம், செல்லப்பரால் சன்னியாச தீட்சை அளிக்கப்பட்டு அனுப்பப்பட, கொழும்புத்துறையில் ஒரு இலுப்பை மரத்தடியில் அவர் யோகசாதனைகளில் திளைத்ததாகச் சொல்லப்படுகின்றது. செல்லப்பா சுவாமிகள் சமாதியடையச் சில நாள் முன்வரை, யோகர் சுவாமிகள் அவரை மீண்டும் சந்திக்கவில்லை.
பின் அங்கேயே ஆச்சிரமமொன்றமைத்த அவர், இலங்கையெங்கணும் யாத்திரை செல்வதும், நற்சிந்தனைகளை வழங்குவதுமாக இருந்தார். 1940இல் இந்தியப் பயணம் மேற்கொண்ட அவர், திருவண்ணாமலையில் இரமண முனிவரையும் சந்தித்தார். 1934 மார்கழியில், அவரால் துவக்கப்பட்ட சிவதொண்டன் இதழ் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.
பங்குனி 24, 1964ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் சிவ சமாதியடைந்தார்
நான்கு மகாவாக்கியங்கள்
சுவாமிகளின் திருக்கையெழுத்து செல்லப்ப தேசிகர் யோகசுவாமிகளுக்குக் ஞானத்தைப் போதிக்கும் வகையில் அருளிய மாணிக்கமணியனைய வார்த்தைகளை யோகசுவாமிகளும் தன் பக்தர்களுக்கும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். மேலும் இவற்றை தன்னுடைய நற்சிந்தனையிலும் பரவலாக விரவி வைத்தார். யோகசுவாமியின் அடியார்களால் 'மகாவாக்கியங்கள்' என்று கூறப்படும் அவை வருமாறு எப்பவோ முடிந்த காரியம் , நாம் அறியோம், ஒரு பொல்லாப்பும் இல்லை, முழுதும் உண்மை
அருளிய நூல்கள் - யோகர் சுவாமிகள் பாடிய பாடல்கள், கவிதைகள், அருண்மொழிகள் என்பன, அவரது சீடர்களான மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி என்போரால் தொகுக்கப்பட்டு, தமிழில் 'நற்சிந்தனை' எனும் நூலாகவும், ஆங்கிலத்தில் 'வுhந றுழசனள ழக ழுரச ஆயளவநச' என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளன
சீடர்கள் - யோகர் சுவாமிகளின் நேரடிச் சீடர்களாக, மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமிகள் ஆகியோர் சொல்லப்படுகின்றனர். இவர்களில் சந்தசுவாமி, இலங்கையின் கடைசி ஆங்கிலேய ஆளுநர் சோல்பரி பிரபுவின் மகன் ஆவார். ஹவாய் சைவ ஆதீனத்தில் 162ஆவது நந்திநாத பரம்பரை சற்குருவாக அமர்ந்திருந்த சிவாய சுப்ரமணியசுவாமியும் யோகர் சுவாமிகளது சீடரே! இவர்களைவிட, கௌரிபாலா (யேர்மன் சுவாமி), பரிநரிக்குட்டி சுவாமி (அவுஸ்திரேலியா) ஆகியோரும் சுவாமிகளின் சீடர்கள் ஆவர்.
யோகசுவாமிகள் இந்நிலவுலகில் உலவிய காலத்தில் ஆயிரக்கணக்கான பல்சமய, பல்மொழி அடியவர்கள் அவரது அணுக்கத் தொண்டர்களாக இருந்தனர். ஆனால் அவர்களில் சுவாமிகளின் வழியினை நேர்நிலையாகப் பின்பற்றி துறவுச்சீடராகப் பரிணமித்தவர்கள் மூவரே.
மார்க்கண்டு சுவாமிகள், யாழ்ப்பாணம் கைதடியில் தென்னோலைக் கொட்டில் ஒன்றில் வாழ்ந்து வந்தவர் சந்த சுவாமி. இவர் இலங்கையின் கடைசி ஆங்கிலேய தேசாதிபதி சோல்பரி பிரபுவின் மகன். யோக சுவாமிகளைப் போலவே வேட்டி துண்டுடன் யாழ்ப்பாணக் கோவில்களில் உலாவியவர் செல்லத்துரை சுவாமி, இவர் சுவாமிகளின் பணிப்பிற்கிணங்க சுமார் அரை நூற்றண்டு காலம் யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு சிவதொண்டன் நிலையங்களில் இருந்து பணியாற்றி 2006 ஆம் ஆண்டு சமாதியடைந்தார்
இவர்களைவிட சிவாய சுப்ரமணியசுவாமி, கௌரிபாலா (ஜெர்மன் சுவாமி), பரிநரிக்குட்டி சுவாமி (அவுஸ்திரேலிய இளைஞர்) ஆகியோரும் சுவாமிகளின் சீடர்கள் எனப் பின்வந்தோரால் போற்றப்படுகின்றனர்
சாமி என்றிருக்கிறவர் தானும் மற்றவர்களை போலென்று எண்ணவேண்டும்' என்பதும் 'நீங்களும் சுவாமி பண்ணவேண்டாம், மற்றவர்களையும் சுவாமி பண்ண விடவேண்டாம்' என்பதும் சுவாமிகளின் வாக்குகள்
சிவயோக சுவாமிகள் அருளிய திருப்பாடல்கள் நற்சிந்தனை என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் வெளியான சிவதொண்டன் இதழில் மாதாந்தம் வெளிவந்தன. இவை தொகுக்கப் பெற்று நூலுருவில் 1959இல் முதலில் வெளியிடப்பெற்றது. நற்சிந்தனைச் செய்யுட்கள் ஞானப் பொக்கிஷங்களாகவும், வேதோபநிடத ஆகமசாரமாகவும் விளங்குவன. முன்னைய பதிப்புக்களில் இடம்பெறாத செய்யுள்களும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இந் நாளில் சிவயோக சுவாமிகள் அருளை பெற்று இன்மை மறுமைப் பயன்களை பெற்று உய்வோமாக
பிரசங்கபூசணம் சைவசின்மயர் செஞ்சொற்காவலன் சொல்லின்பநாயகன் சைவநெறிச் சன்மார்க்கர் சித்தாந்த வித்தகர் சொல்லருவி சிவத்தமிழ்ச் செல்வர் சிவநெறிக்காவலன் கலைமாமணி இளஞ்கலைஞர் செஞ்சொற்வேந்தர் பண்டிதர் சைவப்புலவர் எஸ்.ரி.குமரன்
செயலாளர்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்