கந்த சஷ்டி கவசம் - #பழமுதிர்ச்சோலை
நெஞ்சிற்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்கந்தர் சஷ்டிகவசந் தனை.
#குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி.
சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கன்மால் மருமகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவண பவனே சட்கோணத் துள்ளுரை
அரனருள்சு தனே அய்யனே சரணம்
சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வா கனனே வள்ளலே சரணம்
திரிபுர பவனே தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம்
திகழொளி பவனே சேவற் கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளை தற்காத் தருளே
சவ்வும் ரவ்வுமாய் தானே யாகி
வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவண பவனே
குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்சமென் றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங்(கு)
அஞ்சலி செய்வதன் அமுதமும் உண்டு
கார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான்
தம்பி மா ராகக் கொண்ட
சம்பிர தாயா சண்முகா வேலா
நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்
பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்கத்
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை
அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்டு வேகம தாக
உமையுடன் வந்தினி துவந்து புரிந்து
அயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கௌரி லக்ஷ்மி கலைமக ளுடனே
அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித்தோனே
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானு கோபனும்
சூரனோ டொத்த துட்டர்க ளோடு
கோரமே செய்யும் கொடியராக் கதரை
வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்த வமரர்கள் தமக்குச்
சேனா பதியாய் தெய்வீகப் பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானே
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவே ரகமுதல்
எண்ணிலாத தலங்களில் இருந்தாடும் குகனே
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே
தஞ்சமென்(று) ஓதினர் சமயம் அறிந்தங்(கு)
இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
கும்பமா முனிக்குக் குருதே சிகனே
தேன்பொழில் பழநித் தேவ குமாரா
காண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யாஎன்
கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி
அஷ்டலக்ஷ்மி வாழ் அருளெனக்(கு) உதவி
இட்டமாய் என்முன் னிருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே
அருணகிரி தனக்(கு) அருளியதமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்
தேவராயன் செப்பிய கவசம்
பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட
சஷ்டிக் கவசம் தான்செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த்திறம் தந்தருள் வோனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் தமிழ்தரும் அரனே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
சரணம் சரணம் சண்முகா சரணம்.
Gefällt mir
Kommentieren
Keine Kommentare:
Kommentar veröffentlichen