செவ்வாய் தோஷம் நீக்கி, திருமண வரமருளும் வாழை வழிபாடு ... திருப்பைஞ்ஞீலியில் நடக்கும் பரிகாரம் !
அது கடுமையான கோடைக்காலம். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, திருநாவுக்கரசர் காவிரிக்கரை சிவத்தலங்கள் ஒவ்வொன்றாக, நடந்தே சென்று தரிசனம் செய்து வந்தார். திருவானைக்கா, திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்துறை ஆகிய தலங்களை தரிசித்து அடுத்து திருப்பைஞ்ஞீலிக்குச் செல்ல முடிவு செய்தார்.
யமனுக்கு இறைவன் அருள் செய்த தலம் திருப்பைஞ்ஞீலி. அங்கு சென்று இறைவனைத் தொழுதுகொள்ளும் ஆசையில் கோடைவெயிலில் நடந்து வந்தார். வெயிலுக்கு அஞ்சி விலங்குகளும் பறவைகளும்கூட அஞ்சி நிழலிலிருந்து வெளிவரத் தயங்கின. ஆனால், அப்பர் சுவாமிகளோ அஞ்சாது ஐந்தெழுத்து மந்திரம் சொல்லிக்கொண்டே நடந்தார். பசியும் தாகமும் அவர் கண்களை மறைத்தது. காய்ந்து கிடந்த ஓடைகளைக் கண்டு ஏமாற்றமுற்ற சுவாமிகள், நிழல் தேடி நடக்க ஆரம்பித்தார்.
அடியார் துன்புற ஆண்டவன் பொறுப்பானா... அப்பர் சுவாமிகளின் துயர் துடைக்க முடிவு செய்தார். அவர் வரும்வழியில் ஒரு தடாகத்தை உருவாக்கினார். அதன் கரையில் ஒரு மண்டபத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கும் ஓர் அந்தணர் வடிவில் அவரே வந்து தங்கினார். அப்பர் சுவாமிகளுக்கு அந்தக் குளத்தைக் கண்டதும் மனம் மகிழ்ந்தது. இறங்கி தாகம் தீருமட்டும் அருந்தினார். வாட்டும் அந்த வெயிலில் அந்தத் தாடகத்தின் தண்மை அவருக்கு வியப்பூட்டியது. நீர் அருந்தி மேலே வந்தால், அந்தணரோ, 'தாமும் திருப்பைஞீலிக்குச் செல்வதாகவும் தம் கைவசம் இருக்கும் கட்டு சாதத்தை உண்டு பசியாறி ஓய்வெடுத்தால் இணைந்து செல்லலாம்' என்று சொல்லி உணவை நாவுக்கரசரிடம் தந்தார்.
இறைவன் தந்த கட்டமுதை உண்டதும் சுவாமிகள் புதுத் தெம்பு பெற்றார். அந்தணரோடு சேர்ந்து பயணித்தார். திருப்பைஞ்ஞீலி ஆலயம் வரை வந்த அந்தணர், ஆலயத்துள் நுழையும் கணத்தில் மறைந்தார். திருநாவுக்கரசருக்கு மேனி சிலிர்த்தது. தன்னோடு வந்த அந்தணர் இறைவன் என்று உணர்ந்தார்.
'உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க் கில்லை அவலமே'
என்று திருப்பைஞ்ஞீலி இறைவனைச் சரணடைய, வாழ்வில் துன்பங்கள் நேர்வதில்லை என்று பதிகம் பாடினார்.
திருப்பைஞ்ஞீலி புராணச் சிறப்பு மிக்க தலம். கயிலாய மலை ஏழு துண்டுகளாகி விழுந்த இடங்களுள் திருப்பைஞ்ஞீலியும் ஒன்று என்கின்றன புராணங்கள். எனவே இந்தத் தலத்துக்கு 'தென் கயிலாயம்' என்றும் பெயர். ஞீலி என்றால் கல்வாழை. வாழை மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தத் தலத்தின் தலவிருட்சமும் கல்வாழையே. 5 பிராகாரங்கள் கொண்ட பெரும் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ராஜாராஜசோழன், ராஜராஜதேவன் ஆகிய மன்னர்கள் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இங்கு இறைவன் ஞீலிவனேஸ்வரர். அம்பாள் இங்கு இரண்டு சந்நிதிகளில் அருள்பாலிக்கிறாள். இரண்டு சந்நிதிகளிலும் 'விசாலாட்சி' என்ற திருநாமத்தோடே காட்சி கொடுக்கிறாள். இந்த ஆலயத்தில் நவகிரக சந்நிதியில்லை. ஆலயத்தின் இரண்டாம் கோபுரம் ராவண கோபுரம் என்றழைக்கப்படுகிறது. ஒன்பது படிகளில் ஏறி அதைக் கடக்க வேண்டும். ஒன்பது படிகளும் ராவணன் சிம்மாசனத்தில் நவகிரகங்கள் படிகளாக விளங்கியமையை குறிப்பிடுவதாகச் சொல்கிறார்கள். உள்ளே சுவாமி சந்நிதிக்கு முன்னே இருக்கும் நந்திக்கு அருகில் ஒன்பது குழிகள் உள்ளன. அதில் எண்ணெய்விட்டு விளக்கேற்றி, அதையே நவகிரகமாக வழிபடும் வழக்கமும் உள்ளது. யமனுக்கு இங்கு தனிச் சந்நிதியுள்ளது. யமன் சனிபகவானின் அதிதேவதை. எனவே, இங்கு யமனை வழிபடுவதன்மூலம் சனியின் பார்வையினால் உண்டாகும் கெடுபலன்கள் நீங்கும்.
இங்கிருக்கும் வாழைமரங்கள் சப்த கன்னியரின் வடிவாகக் கருதப்படுகின்றன. எனவே இங்கு வாழை மரங்களுக்கு பூஜை செய்யும் வழக்கமும் உண்டு. இதன் மூலம், நாகதோஷ நிவர்த்தி, திருமணத்தடை விலகுதல் ஆகிய நற்பலன்கள் கிட்டும் என்று நம்பப்படுகிறது. வெள்ளி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் இங்கு வாழை பரிகார பூஜை செய்யப்படுகிறது.
மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த திருவிளையாடலின்போது, இறைவன் மீது பாசம் வீசி சாபம் பெற்றுத் தன் பதவியை இழந்த யமன், இந்தத் தலத்தில் வந்து இறைவனை வணங்கி மீண்டும் தன் பதவியைப் பெற்றான். எனவே ஈசனுக்கு 'அதிகார வல்லபர்' என்ற பெயரும் உண்டு. எனவே, இழந்த பதவியைப் பெற விரும்புபவர்கள் வழிபடும் தலமாகவும் இந்தத் திருத்தலம் விளங்குகிறது.
இங்கு ஆயுஷ்ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் செய்பவர்கள் நீடித்த ஆயுளைப் பெறுவர் என்பது ஐதீகம்.
இங்கு ஆயுஷ்ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் செய்பவர்கள் நீடித்த ஆயுளைப் பெறுவர் என்பது ஐதீகம்.
விஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்கினி பகவான், ராமர், அர்ச்சுனன், வசிஷ்ட முனிவர் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டுப் பலன் பெற்றுள்ளனர். இங்கு மூலவர் சந்நிதியில் ரத்தின சபை உள்ளது. வசிஷ்ட முனிவரின் விருப்பத்திற்கு இணங்கி ஈசன் திருநடம் புரிந்த தலம் இது.
இத்தகைய பெருமை வாய்ந்த இந்தத் தலத்தில் இன்று, திருநாவுக்கரசருக்கு இறைவன் கட்டமுது வழங்கிய திருவிளையாடல் நிகழ்த்தப்படுகிறது. இங்கு மட்டுமல்ல பல்வேறு சிவத் தலங்களிலும் இந்தத் திருவிளையாடல் நடத்தப்படுகின்றது. இந்தத் திருவிளையாடலைக் கண்டு வணங்க, காலம் முழுவதும் நிறைவாக உணவு கிட்டும் என்பது நம்பிக்கை. நாளை, அப்பர் பெருமானின் குருபூஜை நடைபெறுகிறது.
நன்றி . விகடன் ஆன்மிகம்