வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்
==================================
வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் இறைவனான சிவபெருமான் இளைஞராக வந்து வேதத்தின் பொருளினை எடுத்து உரைத்ததைப் பற்றி விளக்கிக் கூறுகிறது.
வேதமும் சிவலிங்கமும் ஒன்றே என்றும், வைதிக சைவம் சிறந்தது என்றும், விரதமுறைகள் மேற்கொள்ள மதுரைபதி சிறந்தது என்றும் இப்படலம் எடுத்து உரைக்கிறது.
வேதங்கள் தோன்றிய விதமும், அவற்றின் பொருளும் இப்படலத்தில் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக் காண்டத்தின் பதினாறாவது படலம் ஆகும்.
உலகம் அழிந்து தோன்றுதல்
ஒரு சமயம் ஊழிக்காலம் உண்டானது. அதனால் பதிநான்கு உலகங்களும் அடங்கின. மறைகள் ஒடுங்கின.
பின்னர் சிவந்த கதிர்களை உடைய சூரியனின் முன்னால் மலரும் தாமரை மலர் போல சிவபெருமானின் முன்னர் மீண்டும் எல்லாமும் தோன்றின.
அப்போது இறைவனின் திருவாக்கில் இருந்து ஓம் என்னும் பிரணவம் தோன்றியது. அப்பிரணவத்திலிருந்து வேதங்கள் தோன்றின.
நைமிசாரணியத்தில் இருந்த கண்ணுவர், கருக்கர் உள்ளிட்ட முனிவர்கள் வேதங்களை பயின்றனர். ஆனாலும் அவ்வேதங்களின் உட்பொருளை உணராது மனம் கலங்கி முகம் வாடி இருந்தனர். அப்போது அங்கே ஆணவ மலத்தை வென்ற அரபத்தர் என்ற முனிவர் வந்தார்.
அரபத்தரின் வழிகாட்டல்
முகம் வாடியிருந்த முனிவர்களை நோக்கிய அரபத்தர் “நீங்கள் பாசம் நீக்கப்பட்டு விருப்பு வெறுப்பற்ற தன்மையை உடையவராய் இருந்தும், மனம் வேறுபட்டு முகம் வாடியிருக்க காரணம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அம்முனிவர்கள் “ஐயனே, மும்மலங்களையும் இயல்பாகவே நீக்கக்கூடிய இறைவன் அருளிய வேதத்தின் பொருளை அறிய இயலாமல் அஞ்ஞான மனத்தினை உடையவர்களாய் இருக்கின்றோம். ஆதலால் இதற்கு தங்களின் ஆலோசனை யாது?” என்று கேட்டனர்.
அதற்கு அரபத்தர் “வேதத்தினை அருளிய சிவபெருமானால் மட்டுமே அதற்குரிய விளக்கத்தினைத் தெரிவிக்க இயலும். ஆதலால் நீங்கள் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வேதத்தின் பொருளினை அறிந்து கொள்ளுங்கள். தவம் இயற்ற சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் மதுரைப்பதி சிறந்தது” என்று முனிவர்களுக்கு வழிகாட்டினார்.
முனிவர்களின் தவம்
அரபத்தரின் வழிகாட்டுதலின்படி கண்ணுவர் உள்ளிட்டோர் வேதத்தின் பொருளினை அறியும்பொருட்டு மதுரை சென்று அடைந்தனர்.
பொற்றாமரைக் குளத்தில் நீராடி முறைப்படி சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டனர். பின்னர் கல்லாமரத்தின் கீழ் குருவாகிய தென்முகக்கடவுளை வணங்கி தங்களுக்கு குருவாகி வேதத்தின் பொருளினை எடுத்துரைக்குமாறு வேண்டினர்.
இவ்வாறு அவர்கள் ஒரு வருடக்காலம் முறைப்படி வழிபட்டனர். ஒருநாள் இறைவன் பதினாறு வயது நிரம்பிய சர்வலட்சணங்கள் பொருந்திய வேதிய இளைஞனாக முனிவர்களின் முன்னர் தோன்றினார்.
வேதத்தின் பொருள் விளக்கம்
முனிவர்களிடம் “குற்றமற்ற தவத்தினை உடையவர்களே, உங்கள் விருப்பம் யாது?” என்று இறைவனார் கேட்டார். அதற்கு அம்முனிவர்கள் ஒப்பற்ற சிறப்பினை உடைய மறைகளின் பொருளினை அருள வேண்டும்” என்று விண்ணபித்துக் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு இறைவனார் லிங்கத்தின் முன்சென்று “வேதங்களின் பொருளினை அறிதலே இம்மையின் போக பேற்றிற்கும், பாசபந்தத்தை அறுக்கும் வீடுபேற்றிற்கும் கருவி ஆகும்.
இச்சிவலிங்கமும், வேதமும் ஒன்றே. ஆதியாகி, அந்தமாகி, என்றும் குன்றாத ஒளிவடிவாய் இருப்பவர் இச்சொக்கலிங்கம்.
இறைவனின் திருவாக்கிலிருந்து உருவாகிய பிரணவத்திலிருந்து, விரும்பிய பொருளை அடைவதற்குரிய சமட்டி, வியட்டி என்னும் இரண்டு வேற்றுமைகளை உடைய காயத்ரி தோன்றியது.
இந்த காயத்ரியானது சொக்கலிங்கரின் திருவருளால் நான்கு வேதங்களைத் தந்தன. பின்னர் இறையருளால் நான்கு வேதங்களும் அளவற்றனவாய் விரிந்தன.
சொக்கநாதரின் நடுமுகத்தில் இருந்து சிவாகம நூல் தோன்றியது. தற்புருட முகத்திலிருந்து இருபத்தொரு சாகைகளோடு இருக்கு வேதம் தோன்றியது.
அகோர முகத்திலிருந்து நூறு சாகைகளோடு யசுர் வேதம் தோன்றியது. வாமதேவ முகத்தில் ஆயிரம் சாகைகளோடு சாமவேதம் தோன்றியது.சத்தியோசாத முகத்தில் நாட்டப்பட்ட ஒன்பது சாகைகளோடு அதர்வண வேதம் தோன்றியது.
வேதங்கள் கரும காண்டம், ஞான காண்டம் என இருவகைப்படும். கருமகாண்டம் சொக்கலிங்கமூர்த்தியின் பூசனைக்குரிய வினைகளை அறிவிக்கும். ஞானகாண்டம் இறைவனின் சச்சிதானந்த வடிவத்தை அறிவிக்கும்.
நீங்கள் கருமகாண்டத்தில் கூறியபடி இச்சிவலிங்கத்தை வழிபட்டு ஞானகாண்டத்தின் வழிகாட்டுதலின்படி இறைவனின் உண்மைவடித்தை உணர்ந்து தெளிக.
வைதிகத்துள் சுத்த சன்மார்க்கமாகிய வைதிகம் சைவம். அதனை உறுதியுடன் பற்றிடுக. யாம் கூறிய இப்பொருள்கள் அனைத்தும் உங்களின் மயக்கத்தினை தீர்ப்பதாக அமைக.” என்று கூறி முனிவர்களின் முதுகில் தமது திருக்கரத்தால் தடவிக் கொடுத்து சிவலிங்கத்துள் சென்று மறைந்தார்.
இப்படலம் கூறும் கருத்து
திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதற்கு ஏற்ப நம் வாழ்வில் திக்கு தெரியாமல் தவிக்கும்போது இறைவனை வேண்டினால் அவர் முனிவர்களின் கவலைப் போக்கியதுபோல் நம்மைக் காப்பாற்றுவார்